தமிழ் அரசியல் கைதிகள் சிலர் ஜனாதிபதி கோட்டாபயவின் சிபார்சின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை அரசியல் கைதிகளது குடும்பங்கள் மறுதலித்துள்ளன.
அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகளது குடும்பங்களால் யாழ்.ஊடக அமையத்தில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகளது குடும்பங்களின் சார்பில் முன்னாள் அரசியல் கைதியான கோமகன் தெரிவித்துள்ளார்.
அதிலும் அனுராதபுரம் சிறையிலிருந்து அரசியல் கைதிகள் 7பேர் விடுவிக்கப்பட்டதாக இத்தகைய பொய் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அனுராதபுரம் சிறையில் ஆறு அரசியல் கைதிகளே உள்ளனர்.அவர்கள் எவருமே விடுவிக்கப்படவில்லையெனவும் கோமகன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இப்போது சிறைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி 36 பேர் தண்டனை பெற்ற கைதிகளாகவும், 35 பேர் சந்தேகக் கைதிகளாகவும் மற்றும் 15 பேர் மேன் முறையீடு செய்த கைதிகளாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கமென சிலர் கைதாகியுள்ளனர். அதே போன்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைதானவர்களும் உள்ளனர். ஆனால் இவர்கள் அத்தகைய அரசியல் கைதிகள் விவரத்தில் உள்ளடக்கப்படவில்லை.
முன்னைய நல்லாட்சி அரசில் அரசியல் கைதிகள் எவரும் விசேடமாக விடுவிக்கப்படவில்லை. விடுதலையானவர்கள் நீதிமன்றில் வழக்காடியே வந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளின் போது அரசியல் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். தான் கூறியது போன்று அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோமகன் தெரிவித்துள்ளார்.