இலங்கை அகதிகள் நலத் திட்டத்தில் முறைகேடு செய்த குற்றத்திற்காக இந்திய வருவாய்துறை அதிகாரிகள் நால்வருக்கு நான்காண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று (06) வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை விருத்தாச்சலம் மற்றும் கடலூர் பகுதிகளில் வாழும் இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியது.
அவ்வாறு வழங்கப்பட்ட 50 தசம் எட்டு இலட்சம் இந்திய ரூபா நிதி உதவியை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தமைக்காகவே இந்திய வருவாய்துறை அதிகாரிகள் நால்வருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைக்கேடுடன் தொடர்புடைய 15 பேருக்கு எதிராக கடலூர் நீதிமன்றத்தில் இந்திய இலஞ்ச ஊழல் ஒழிப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கமைய இன்றைய தினம் வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் குறித்த நான்கு வருவாய்துறை அதிகாரிகளுக்கு இவ்வாறு கடூழிய சிறைத் தண்டணையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை பெற்றுள்ள வருவாய்துறை அதிகாரிகள் அனைவரும் 70 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் ஊழல் வழக்கு ஒன்றில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.