முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்நறுவையில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அந்த விருந்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னாள் ஜனாதிபதி அந்த விருந்தை ஏற்பாடு செய்யவில்லை எனவும் அவரது ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி விடுமுறைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் அதற்கு விசா கிடைக்கவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் பொய்யானது எனவும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக பொலன்நறுவையில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் தயாசிறி ஜயசேகரவை தவிர வேறு எவரும் அதில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
அத்துடன் சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மைத்திரியின் தொலைபேசி அழைக்கும் பதிலளிக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.