பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு முன்பாக தாங்கியிருந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த வருடம் பெப்ரவாரி 4ஆம் திகதி இடம்பெற்ற தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் பிரிகேடியர் பிரியங்க பெணான்டோக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்றபோது அங்கு கூடியிருந்தோர் புலிக்கொடிகளை தாங்கியிருந்தனர்.
இந்த நிலையில் பிரிகேடியர் பெணான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த வழக்கின் தீர்ப்பில் பெணான்டோ குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 2400 பவுண்ட்ஸ் அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் நாளை எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய பெரும்பாலும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் இராணுவ தளபதி கலந்துரையாடி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு தொடர்ந்தும் ராஜதந்திர வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.