லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல் முன்னெடுத்து பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்ட நபர் பாகிஸ்தான் வம்சாவளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத செயலில் ஈடுபட்ட உஸ்மான் கானின் சடலத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அடக்கம் செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி வரலாற்று சிறப்பு மிக்க லண்டன் பாலத்தில் வைத்து உஸ்மான் கான் பொதுமக்களை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியது.
இதில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், பொதுமக்களால் சாகசிகமாக தடுத்து நிறுத்தப்பட்ட உஸ்மான் கானை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
லண்டன் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட சடலமானது, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து உஸ்மானின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சடங்குகளுக்கு பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கிராமத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் தீவிரவாத செயலில் ஈடுபட்ட உஸ்மான், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் என்ற தகவலை வெளியிட்ட பிரபல பத்திரிகை அலுவலகம் மீது பொதுமக்கள் இருமுறை தாக்குதல் முன்னெடுத்தனர்.
நாளிதழ்களை கைப்பற்றி தீயிட்டு கொளுத்தவும் செய்தனர். மட்டுமின்றி உஸ்மான் பாகிஸ்தான் நாட்டவரல்ல எனவும், அங்குள்ள அமைச்சர் ஒருவர் உறுதிபட தெரிவித்திருந்தார்.
ஆனால் லண்டனில் இருந்து உரிய முறைப்படி உஸ்மானின் சடலம் இஸ்லாமாபாத் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும், உஸ்மானின் சடலம் இதுவரை பாகிஸ்தான் மண்ணில் கொண்டுவரப்படவில்லை என்றே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் சாதித்து வருகிறது.