முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்த கோரிக்கையை விடுப்பதாக, அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும். எனினும் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் தவறினால் துன்பம் அனுபவிக்கும் கைதிகளை உடனடியாக விடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
சிறைச்சாலையில் நல்லவர்களும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் அங்கையே மரணித்துப் போகின்றனர்.
அரசியல் கைதிகள் என்ற பெயரில் மிகவும் சிறிய அளவிலோனோர் சிறையில் உள்ளனர். விடுதலை பெற வேண்டிய குழுவினர் உள்ளனர். அவர்களில் இராணுவத்தினரும் அடங்கும்.
அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளனர். அவர்களுக்கு தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு எதிராக வழக்குகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை. அதுவும் குற்றமாகும். சமூகத்தில் வேலை செய்து வாழக்கூடியவர்கள் பலர் உள்ளனர்.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை குறித்தும் சிந்திக்க வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் தவறு இடம்பெற்றது. அதற்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என அவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.