தீவகம், சாட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பொதுமக்களால் தீமூட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்த நிலையிலேயே பொதுமக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களை நேற்று (10) மறித்த சிலர் அவற்றை தீ வைத்து எரித்தனர். இதனால் இரண்டு உழவு இயந்திரங்களும் பலத்த சேதமடைந்தன.
மணல் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும், மணல் கடத்தல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்களே உழவு இயந்திரத்திற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வேலணை- சாட்டி நல்ல தண்ணீர் கிணறுகள் உள்ள பகுதிகளுக்கு அண்மையில் தனியார் காணிகளில் கடந்த சில நாட்களாக பெருமளவு மணல் கொள்ளை இடம்பெற்று வருகிறது.
கடந்த 3 நாட்களில் சுமார்15 உழவு இயந்திரங்களுடன் மணல் கொள்ளையர்கள் இங்கு முகாமிட்டு, மணல் அகழ்ந்து கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களில் மட்டும் 200 இற்கும் அதிக உழவு இயந்திர மணல் கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர். தீவக பொது அமைப்புக்களும் முறையிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாட்டிப் பகுதிக்கு பொலிசார் சென்றபோது, மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
தீவக பகுதிக்கான ஒரேயொரு குடிநீர் ஆதாரமாக சாட்டி பகுதியில் உள்ள நன்னீர் கிணறுகள் உள்ளன. அந்த பகுதியில் பெருமளவு மணல் கொள்ளை இடம்பெறுவது, அந்த பகுதியையும் உவர்நீராக மாற்றிவிடும். தீவகத்தின் பல பகுதிகளில் மணல் கொள்ளையால் நன்னீர் உவரடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.