புதிதாக அமைக்கப்பட்டுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழாவில் பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீனவர்களுக்கு அரசாங்கம் அறிவித்திருப்பதாக, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா- இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கச்சதீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் மிகச் சிறியதாக இருப்பதால், அதன் அருகே புதியதொரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் ஆளணி உதவியுடன் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் திறப்பு விழா வரும் 7ஆம் நாள் நடைபெறவுள்ளது.
இந்த புதிய ஆலய கட்டுமானப் பணி குறித்து இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று ஏற்கனவே சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில், புதிய ஆலய திறப்புவிழாவில் பங்கேற் தமிழ் நாட்டில் இருந்து பக்தர்கள் செல்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று இராமேஸ்வரத்தில் உள்ள மக்கள் கோரியிருந்தனர்.
எனினும், கச்சதீவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில் யாழ். பேராயர், இலங்கை இராணுவ மற்றும் கடற்படையினர் மாத்திரமே கலந்து கொள்வர் என்றும், பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாக, பெயர் வெளியிட விரும்பாத இந்திய புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.