கடலூர் உழவர் சந்தையில் உள்ள ஒரு காய்கறி கடையில் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அதனை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். இதனால் வெங்காயத்தின் விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடலூர் திருப்பாப்புலியூர் பகுதியிலுள்ள பான் பரி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபார கடை ஒன்றில் பெங்களூரிலிருந்து 22 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வெங்காயம் சிறிய அளவில் உள்ள வெங்காயம் 20 ரூபாய்க்கும், நடுத்தர வெங்காயம் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த தகவலறிந்த கடலூர் நகர மக்கள் அந்தக் கடை முன்பு குவிந்துள்ளனர். இதுவரை சுமார் 15 டன்னுக்கு மேல் வெங்காயம் விற்பனையாகி உள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நபர் ஒருவருக்கு இரண்டரை கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது. வெங்காயம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் கடலூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையிலும் கூட தலைமைச் செயலக வளாகத்தில் கிலோ வெங்காயம் 50 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதேபோல ஆங்காங்கு மக்களுக்காக குறைந்த விலையில் வெங்காய விற்பனை அதிகரித்து வருவதால் விலை விரைவில் மட்டுப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
இன்னொரு கடையிலும்
கடலூர் உழவர் சந்தையில் உள்ள ஒரு கடையில் இன்று காலை 1 கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடலூர் பழைய டவுன் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நபர் ஒன்றுக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது. வெங்காயத்தை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், கடலூர் – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.