தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாக ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஐந்து வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரிய வந்துள்ளதாக, ஆய்வை மேற்கொண்ட பார்சிலோனா உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
4 முதல் 7 வயது வரையிலான சிறுவர்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான மூல காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வுக்கு 1,480 சிறுவர்கள் உட்படுத்தப்பட்டார்கள். அவர்களது உடல் உழைப்பு, தூங்கும் நேரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம், இயற்கைப் பொருள்களால் ஆன உணவு உண்ணும் அளவு, பதப்படுத்தப்பட்ட உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர்களை விசாரித்து தகவல்களைப் பதிவு செய்து கொண்ட ஆய்வாளர்கள், சிறுவர்களின் எடை, உயரம், இடுப்பளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ததில், குறைந்த அளவே இயங்கி, அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பது கண்டறியப்பட்டது.
எனினும், அதிக உடல் இயக்கம் இல்லாமல், உட்கார்ந்தபடியே படிப்பது, வரைவது, குறுக்கெழுத்து போன்ற போட்டிகளில் பங்கேற்பது போன்றவற்றில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, அந்தக் காரணங்களால் உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கான விளம்பரங்களால் கவரப்படுகிறார்கள். இது, அவர்களை அதிக அளவில் ஆரோக்கியமற்ற பண்டங்களை சாப்பிடத் தூண்டுகிறது. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு குளிர்பானங்கள், சர்க்கரைச் சத்து அதிகம் நிறைந்த வடிகட்டப்பட்ட மாவுப் பொருள்களால் ஆன பண்டங்களை அந்தச் சிறுவர்கள் அதிகம் உண்கின்றனர்.
இது அவர்களுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்பட வழிவகை செய்கிறது. மேலும், தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்களுக்கு தூக்கம் கெடுவதால், அவர்களது தூங்கும் நேரம் குறைகிறது. சரியான தூக்கம் இல்லாத 45 சதவீத சிறுவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.