திருபட்டினத்தில் பெண் தாதாவான எழிலரசியை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தை சேர்ந்தவர் ராமு. சாராய வியாபாரி. பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி வினோதா. இந்தநிலையில் எழிலரசி என்ற பெண்ணை இரண்டாவதாக ராமு திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஏற்பட்ட விரோதத்தை தொடர்ந்து ராமு- எழிலரசி இருவரும் சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் ராமு கொலை செய்யப்பட்டார். எழிலரசி காயங்களுடன் தப்பினார். கணவர் ராமு கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது முதல் மனைவி வினோதா மற்றும் உறவினர் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து ராமு கொலையில் தொடர்புடையவர்கள் பழி தீர்க்கப்பட்டனர்.
சுமார் 2 வருடங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் திருபட்டினத்தில் புதிதாக அவர் கட்டி வந்த திருமண மண்டப கட்டிடத்தில் வைத்து கூலிப்படையினரால் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக எழிலரசி மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். பெண் தாதாவாக வலம் வரும் எழிலரசியை பழிக்குப்பழி வாங்க எதிர்தரப்பினர் சதி வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாயின.
இந்தநிலையில் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மூத்த மகன் அஜேஸ்ராம் (20) கூலிப்படையை சேர்ந்த 3 பேரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தனது வீட்டில் தங்க வைத்திருப்பதாக. மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் தலைமையில் மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் திருமலைராயன்பட்டினம், கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட போலீசார் ராமு வீட்டுக்கு உடனடியாக விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் வீட்டில் பதுங்கி இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அதிரடியாக ராமுவின் வீட்டிற்குள் நுழைந்து அஜேஸ்ராம் மற்றும் கூலிப்படையான புதுச்சேரியை சேர்ந்த துளசிதாசன்(20) விழுப்புரத்தை சேர்ந்த சூர்யா (19) சென்னையை சேர்ந்த சுரேஷ் (23) ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கைதானவர்கள் கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசியை கொலை செய்வதற்காக அவர்கள் காரைக்கால் வந்து பதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.