மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான புகையிரத போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னைய அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இதன் நிர்மாணப்பணிகளின் சீரின்மை காரணமாக,இந்த மார்க்கத்தில் புகையிரத சேவையை நடத்துவது ஆபத்தானது என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்தே புகையிரத சேவைகள் அமைச்சு, போக்குவரத்தை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
ஒரு சீன நிறுவனம் இந்த புகையிரதப் பாதையை அமைத்தது. எனினும், அது தேவையான தரத்திற்கு ஏற்றதாக இல்லை என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கட்டுமானத்தில் ஈடுபட்ட சீன நிறுவனத்திற்கு முன் அனுபவம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறையிலிருந்து 26.75 கி.மீ நீளமுள்ள பெலியத்த வரையிலான புகையிரத பாதை கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
புகையிரத போக்குவரத்திற்கு தேவையான தரங்களை பூர்த்தி செய்கிறதா என்பதை தீர்மானிக்க முழுமையான விசாரணை நடத்தப்படும் வரை புதிய பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த புகையிரத மார்க்கத்தை அமைப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து பயணிகளிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தரயிலின் கட்டுமானத்திற்கான நிதியை சீனாவின் வங்கியொன்று வழங்கியது. ஒப்பந்தத்தை சீனா தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கோர்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
பெரும்பாலான கட்டுமானப் பணிகளை சீனா ரயில்வே குழு 5 (சிஆர் 5) மற்றும் மத்திய பொறியியல் பணியகம் செய்தன.
மாத்தறை-பெலியத்த புகையிரத பாதை 1948 க்குப் பிறகு இலங்கையில் கட்டப்பட்ட முதல் புகையிரத பாதை ஆகும். இது இலங்கையின் மிக நீளமான சுரங்கப்பாதை (1.5 கி.மீ) மற்றும் இரண்டாவது மிக நீண்ட புகையிரத பாலமாகும் (1.04 கி.மீ.).