இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பூஜாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் அவரது கணவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இந்த பெண் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸாரினால் பல்வேறு நிறுவனங்களிடம் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஆட்பதிவு திணைக்களத்திடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேசத்தில் அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை பொலிஸார் அழைத்து விசாரித்த போது இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் இவர் தான் என தெரியவந்துள்ளது.
இந்த பெண் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதே பிரதேசத்தை சேர்ந்தவருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.