ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து தற்காலிக ஓய்வு பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மீண்டும் தனது அரசியல் பயணத்தை நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளார்.
அந்த வகையில் நாளைய தினம் மொரட்டுவையில் தனது ஆதரவாளர்களை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு மொரட்டுவையில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் இரான் விக்ரமரட்ன இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாச நாடு முழுவதும் சென்று தனது ஆதரவாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது தேர்தலுக்கு முன்னர் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சஜித் பிரேமதாச இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதேவேளை, நாளை மறு தினம் கம்பஹா மாவட்டத்திலும், வியாழக்கிழமை களுத்துறை மாவட்டத்திலிம் சஜித் பிரேமதாச கூட்டங்களை நடத்தவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.