நிலையான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு புத்திஜீவிகள், மதத் தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கின்றார்.
வட்ட மேசையில் ஒன்றுகூடி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நல்லிணக்கம், தேசிய கலந்துரையாடல், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அழைப்பினை விடுத்திருக்கின்றார்.
நல்லிணக்க அமைச்சானது ஜனாதிபதிக்கு கீழ் நேரடியாக வருவதனால் இந்த அமைச்சு மீதான விவாதத்தில் அவரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இலங்கையில் இனப்பிரச்சினை என்பது புதிய விடயமல்ல. 1930ஆம் ஆண்டு முதல் 8 தசாப்தங்களாக சிங்கள – முஸ்லிம், சிங்கள – தமிழ் கலவரங்கள் நடந்தேறியுள்ளன.
இதன் காரணமாக நாட்டு மக்களிடையே குரோதமும் சந்தேகமும் பீதியும் ஏற்பட்டதுடன் நாட்டின் முன்னேற்றம் தகர்த்தெறியப்பட்டது.
இதன் மூலம் பொருளாதாரம் சீர்குலைந்தது.சுதந்திரத்தின் பின்னர் எமது தலைவர்கள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முனைந்தபோதிலும் அது கைகூடவில்லை.
பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலமாக தீர்வு வழங்க முனைந்தபோது பிக்குகள் ஒன்றுகூடி பண்டாரநாயக்கவிடம் ஒப்பந்தத்தை கிழித்தெறியவேண்டுமெனக் கோரினர்.
இதனையடுத்து அந்த ஒப்பந்தம் தீயிட்டு எரிக்கப்பட்டது. அதேபோன்று டட்லி – செல்வா ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது.
இதன் பின்னர் மிகவும் கொடூரமான யுத்தத்துக்கு முகம்கொடுக்க நேரிட்டது என்றும் ஜனாதிபதி கடந்தகால தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
1983ம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் பிரபாகரனுடன் யுத்தம் செய்ய வழிவகுத்தது. வடக்கு கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் தெற்குக்கும் மலைநாட்டுக்கும் பரவி தலதா மாளிகை வரைக்கும் வந்தது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ உட்பட பாதுகாப்புப் பிரதானிகள் பலர் கொல்லப்பட்டனர். தற்போதைய நிலையில் ஈழம் அமைக்கவேண்டுமென்ற சிந்தனையை தோற்கடிக்க வேண்டும்.
தற்போது தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பின் மூலம் வெற்றிகரமான பிரவேசத்தை மேற்கொள்ள முடியும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
பிரச்சினைக்கு தீர்வு வழங்காமையால் அது தேசிய பிரச்சினையாக மாறி இன்று சர்வதேசம் வரை வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும் அதிகாரத்தை மீள கைப்பற்றுவதற்காகவும் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.
மகாநாயக்க தேரர்களிடம் சென்று நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாகக் கூறுகின்றனர். புதிய அரசியலமைப்பின் மூலம் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 13 பிளஸ் தீர்வை முன்வைப்பதாக கூறிய போதிலும் அதிகாரத்திலிருந்து சென்ற பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கில் நாட்டை பிளவுபடுத்தப் போவதாக கூறி வருகின்றார். இவ்வாறான கருத்துக்களை முன்னாள் ஜனாதிபதி கூறுவது துரதிர்ஷடவசமாகும்.
தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமூச்சுடன் செயற்படுவது மாத்திரமின்றி வடக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரா. சம்பந்தன் போன்ற தலைவர் இதுவரை இருக்கவில்லை.
இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் கூட்டமைப்புத் தலைவராகவும் தனது பொறுப்பை சரிவர நிறைவேற்றுகின்றார்.
இவரது காலத்துக்குள் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உள்ளக்கிடக்கைகளை கொட்டித் தீர்த்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் கருத்து இவ்வாறிருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் அரசியல் தீர்வின் அவசியம் குறித்து அண்மைக்காலமாக தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இன்றைய ஆட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அனுசரணையுடன் பெற்றே தீருவோம்.
எவ்வகையான சூழ்நிலையிலும் கடந்தகாலங்கள் போல் நாம் ஏமாறப்போவதில்லை. இதேவேளை தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை என்று கூறியுள்ளார்.
அண்மையில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியபோது அரசியல் தீர்வு விடயத்தில் அவர் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ளார் என்பதை நாம் தெளிவாக தெரிந்துகொண்டோம்.
புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கு பல்வேறு சக்திகள் தடையாக இருக்கலாம்.
அந்தத் தடைகளை வெற்றிகொள்ள வேண்டுமாயின் நாங்களும் நீங்களும் சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் பிரசாரம் செய்வதன் மூலமே எமது குறிக்கோளை வெற்றிகொள்ள முடியுமென்று ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்துள்ளார்.
அவர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது கருத்துக்களிலிருந்து இவர்கள் இருவரும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண வேண்டுமென்பதில் அக்கறையுடன் இருப்பது புலனாகின்றது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக 3 தசாப்தகாலங்கள் தமிழ் மிதவாதத் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடியிருந்தனர்.
அந்தப் போராட்டம் தென்பகுதி அரசாங்கங்களினால் உதாசீனப்படுத்தப்பட்டதையடுத்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
3 தசாப்தகாலமாக ஆயுதப்போராட்டம் இடம்பெற்றபோதிலும் அந்தப் போராட்டமும் சர்வதேசத்தின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் அரசாங்க தரப்புக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் பலதடவை இடம்பெற்றன.
2002ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தையின்போது சமஷ்டி தீர்வை உள்ளடக்கும் வகையிலான ஒஸ்லோ பிரகடனம் வெளியிடப்பட்டது. அன்று புலிகள் பலமாக இருந்த நிலையில் சமஷ்டி தீர்வுக்கு தென்னிலங்கை இணங்கியிருந்தது.
இன்று ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்று கேட்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் நாட்டில் உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கமானது இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற விடயத்தில் அக்கறைகாட்டி வருகின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் இவ்விடயம் தொடர்பில் பகிரங்கமாகவே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று இந்தமுறையும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தவறு இடம்பெற்று விடுமோ என்ற அச்சம் தமிழ்மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பினை மாற்றியமைப்பதன் மூலம் தீர்வினைப் பெற்றுவிட முடியும் என்ற அசையாத நம்பிக்கையில் செயற்பட்டு வருகின்றார்.
அவரது இத்தகைய செயற்பாட்டினை அரசாங்கத் தரப்பினரும் ஜே.வி.பி. போன்ற கட்சியினரும் பகிரங்கமாகவே பாராட்டி வருகின்றனர்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி நடைபெற்று வருகின்றது. வரலாற்றில் ஒரு போதும் இல்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.
அரசியலமைப்பை மாற்றியமைத்து நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு உண்மையிலேயே நல்ல சந்தர்ப்பம் தற்போது பிறந்திருக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கமும் தமிழ்த் தரப்பும் இணைந்து தீர்வைக் காண்பதற்கு முயலவேண்டும்.
இந்தத் தீர்வானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யத் தக்கவகையில் அமைய வேண்டியது இன்றியமையாததாகும்.
அன்று பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என்பன கிழித்தெறியப்பட்டதைப்போன்று தற்போது முன்னெடுக்கப்படும்
அரசியல் தீர்வுக்கான முயற்சியும் சென்றுவிடக்கூடாது என்பதில் இருதரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும்.
அரசியல் தீர்வுக்கான முயற்சியைக் குழப்பியடிப்பதற்கு தென்பகுதியில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
எனவே இதற்கு முகங்கொடுக்கும் வகையில் செயற்றிட்டங்களை சகல தரப்பினரும் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.