சர்வதேசளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் குறைந்த வருமானம் பெற்று வரும் ஏழைகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டி தரவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க் நகரில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நகரில் பேஸ்புக் நிறுவனம் தனது அலுவலகங்களை கட்டியதால் இந்நகருக்கு அருகில் உள்ள சிலிகன் வேலியில் அதிகளவில் ஊழியர்கள் குடியேற தொடங்கியுள்ளனர்.
இதனால் இப்பகுதி முழுவதும் உள்ள வீடுகளின் வாடகை கட்டுப்பாடில்லாமல் உயர்ந்துள்ளது.
மேலும், பேஸ்புக் நிறுவனத்தால் வாடகை கட்டணம் அதிகரித்துள்ளதால் பல்வேறு மக்கள் சொந்த வீடுகளை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.
பேஸ்புக் நிறுவனம் மீதான இப்புகாரை தொடர்ந்து தற்போது நிறுவனர் மார்க் ஷுக்கர்பெர்க் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சிலிகான் வேலி பகுதியில் வசிக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டும் குடும்பங்கள் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொள்ள சுமார் 20 மில்லியன் டொலர்(296,82,00,000 இலங்கை ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பணிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என அந்த அறிவிப்பில் மார்க ஷுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.