சென்னையிலிருந்து அருகே மையம்கொண்டிருந்த ‘நடா’ புயல் நேற்று காரைக்கால் அருகே கரையை கடந்தது.
இதனைத்தொடர்ந்து, சென்னையின் பூவிருந்தவல்லி, போரூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. மேலும், அந்தமான் அருகே காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புயலாக உருவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழைபெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராம டீக்கடையில் நேற்று ஒட்டியுள்ள தகவல் குறிப்பில் அடுத்த ஆபத்தாக ‘வர்டா புயல்’ உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வான சாஸ்திர வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் செல்வகுமார் செய்துவருகிறார். இவரளித்த தகவலில், நடா புயல் சுழற்சியின்போது, நிலப்பரப்பில் ஏற்பட்ட இமயமலை குளிரை வெகுவாக ஈர்த்ததால்தான் போதிய கடல் வெப்பம் இல்லாமல் அதிக மழைக்கு வாய்ப்பில்லாமல் போனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலேசியாவுக்கும் -இந்தோனேஷியாவுக்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது உருவாகியுள்ளது. இதனால் வரும் 4ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் தாழ்வு மண்டலமாக மாறி, தென்கிழக்காக நகர்ந்து புயலாக தீவிரமடையும் என்றும், இது வர்ஷா என அழைக்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.
இந்த வர்ஷா புயல் மணிக்கு 150 கி.மீ. தீவிரமடைந்து 8 முதல் 10ம் தேதிவரை கரையை கடக்க வாய்ப்புள்ளது. தற்போது ஆந்திராவை நோக்கி செல்ல 70 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால், பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் தெரிவித்துள்ளார்