ஆண்ட்ராய்ட் மொபைலில் பல சிறப்பான வசதிகள் இருந்தாலும் அதன் முக்கியமான பிரச்சனை பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுவதுதான்.
இக்குறையைப் போக்க ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப் பதிப்பில் பவர் சேவர் மோட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியை இயக்குவதன் மூலம் 35 சதவீத அளவு வரை பேட்டரியை சேமிக்க முடியும்.
இதற்கு முந்தைய பதிப்புகளில் இந்த வசதி கிடையாது. தற்போது அதிகம் பயன்பாட்டில் இருப்பவை ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் மற்றும் அதற்கு முந்தைய பதிப்பு மொபைல்களே.பொதுவாக ஸ்மார்ட் போன்களின் பேட்டரி தீர்வதற்கு அடிப்படை காரணம் செயல்பாட்டிலிருக்கும் ஆப்ஸ்கள்தான். போனில் அதிகமாக பேசுபவர்களை விட ஆப்ஸ் அதிகம் பயன்படுத்துபவர்களின் பேட்டரி மின் சக்திதான் விரைவில் தீர்ந்துபோவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.மொபைலை ஒருநாளைக்கு ஒரு முறை சார்ஜ் செய்வது சராசரி அளவாகும்.
அதுவே இரண்டு அல்லது மூன்று முறை சார்ஜ் செய்ய நேர்ந்தால் நிச்சயம் பேட்டரி மற்றும் போனின் திறன் பாதிப்புக்குள்ளாகும்.
ஆப்ஸை நிறுத்தவும்
பலரும் செய்யும் ஒரு தவறு ஆப்ஸை பயன்படுத்திய பிறகு அதனை நிறுத்தாமல் விட்டுவிடுவதுதான். ஆப்ஸ் செயல்பாட்டில் இருப்பதால் இரண்டு பிரச்சனைகள் ஏற்படும்.
ஒன்று மின்சக்தி, மற்றொன்று ரேம் நினைவகத்தை பயன்படுத்துவது.
எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் ஆப்ஸ்களான போன் காலிங், மெஸேஜ், கடிகாரம், காலண்டர் ஆப்ஸ்கள் தவிர்த்து மற்ற ஆப்ஸ்களை அவ்வப்போது கிளியர் செய்து விடவேண்டும்.எப்போதாவது பயன்படுத்தும் ஆப்ஸை நீக்கிவிடுவதோ அல்லது தற்காலிகமாக இயக்கத்தை முடக்கிவிடுவதே நல்லது. இதனால் தேவையற்ற இண்டர்நெட் டேட்டா செலவினையும், மின்சக்தி செலவினையும் கட்டுப்படுத்தலாம்.
தற்காலிகமாக இயக்கத்தை நிறுத்துவதாக இருந்தால் செட்டிங்ஸ் மெனுவில் ஆப்ஸ் என்பதில் சென்று நிறுத்தவேண்டிய ஆப்ஸை தேர்வு செய்து அதனை பட்டனை அழுத்தி நிறுத்தவும்.
அத்துடன் அதற்கு கீழ் உள்ள நோட்டிபிகேஷன் என்பதற்கு நேராக உள்ள செக் பாக்ஸில் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.
இந்த செயல்பாட்டை வாரம் ஒரு முறையாவது சரிபார்த்துக் கொண்டால் 20 சதவீதம் பேட்டரி விரயத்தை தடுத்துவிடமுடியும்.அதே போல வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களை அவ்வப்போது கிளியர் செய்யவும்.
ஆப்ஸை நிறுத்த ஆப்ஸ்
செயல்பாட்டிலிருக்கும் ஆப்ஸை நிறுத்த பேட்டரி டாக்டர், பேட்டரி சேவர் என்று கணக்கில்லாத ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன.
இத்தகைய அப்ளிகேசன்களின் வேலை திறந்து இருக்கும் ஆப்ஸ்களை உங்களிடம் அறிவுறுத்தும், உடனே நீங்களும் பட்டனை அழுத்தி நிறுத்துவீர்கள். உடனே அது திறந்த ஆப்ஸ்களை நினைவகத்திலிருந்து நீக்கும். இது தற்காலிகம்தான்.
மீண்டும் சில ஆப்ஸ்கள் இயங்க தொடங்கிவிடும். கிட்டத்தட்ட அனைத்து பேட்டரி சேவர் ஆப்ஸ்களும் இந்த வேலையைத்தான் செய்கின்றன.இந்த ஆப்ஸ்கள் பிற ஆப்ஸின் செயல்பாட்டை நிறுத்தினாலும், வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த வேலைகளை செய்வதற்காக அதிகமான மின்சக்தியையும் ரேம் மெமரியையும் வீணடிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.எனவே, பேட்டரி சேவர் ஆப்ஸ் பயன்படுத்தாமல் முந்தைய தலைப்பில் கூறிய வழிமுறைகளை நாமே செயல்படுத்துவதுதான் மிகச்சிறந்த வழிமுறை.
இந்த வேலையெல்லாம் நம்மால் பார்க்க முடியாது என்பவர்களுக்கு தேவைப்படும்போது பயன்படுத்த ஒரு ஆப்ஸ் உள்ளது. இது மற்ற பேட்டரி சேவர்களைப் போல எப்போதும் செயல்பாட்டில் இருக்காது. நீங்கள் இயக்கும்போது மட்டுமே இயங்கும்.
இந்த ஆப்சின் பெயர் கிரீனிஃபி இந்த ஆப்ஸை பிளே ஸ்டோரில் இந்த லிங்க்கிலிருந்து பெறலாம்.இந்த ஆப்ஸ் முன்பு ரூட் செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே செயல்பட்டது.
தற்போது அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் இயங்குகிறது.
முழுமையான பேட்டரி சார்ஜ்மொபைலை சார்ஜ் செய்யும்போது முழுமையாக சார்ஜ் ஆகும் வரை பயன்படுத்தாமலிருப்பது அவசியம். அடிக்கடி இணைப்பை நீக்கியோ, சார்ஜ் ஆகும்போது பயன்படுத்துவதோ தவறாகும். தொடர்ச்சியாக சார்ஜ் ஆவது தடைபட்டால் பேட்டரியின் ஆயுள் குறையும், மின்சக்தியும் விரைவில் குறைந்துவிடும்.
முழுமையாக சார்ஜ் செய்வதற்கு போன் உபயோகம் இல்லாத சரியான நேரத்தை தேர்வு செய்து சார்ஜ் செய்யவும்.
சார்ஜ் ஆவதை விரைவுபடுத்த போனை சுவிட்ச் ஆப் செய்து சார்ஜ் செய்யலாம்.
இது ஒரு சிறந்த வழி எனினும், மற்றொரு வழியும் இருக்கிறது.
ஏரோப்ளேன் மோடை செயல்படுத்தலாம்.
ஏரோப்ளேன் மோட் செயல்பாட்டிலிருக்கும்போது போன் நெட்வொர்க், ஒய்ஃபீ, இணையத்தைப் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
எனவே, மொபைல் விரைவாக சார்ஜ் ஆவதற்கு வழியேற்படும்.
இந்த செயல்பாட்டின்போது போன் அழைப்புகள் வராது என்பதை கவனத்தில் கொள்ளவும்.அதிக நேரம் சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவேண்டும்.
சார்ஜ் முழுமையடைந்ததற்கான அறிவிப்பு வந்தவுடன் சில நிமிடங்களில் மின் இணைப்பை நீக்கிவிடவேண்டும்.