நாடு மீண்டும் பாதுகாப்பற்ற நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது என்ற அச்சம் அண்மைக்கால சம்பவங்கள் காரணமாக சாதாரண மக்கள் மத்தியில் வேகமாக வலுப் பெற்று வருகின்றது.
ஒருபுறம் தமிழ் மக்களை அச்சமடையச் செய்யும் செய்திகளும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதேவேளை, ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்கள் 32 பேர் இருப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.
ஏற்கெனவே முஸ்லிம்கள் மீது பௌத்த மதகுருமார்; இனவாதத்தையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்துள்ள நிலையில், அமைச்சரின் கருத்து முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
தமிழர்களை புலிப்பயங்கரவாதிகள் என்று கருதிய அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை பிரயோகித்து தான் நினைத்தபடி தமிழர்களை கைது செய்யவும், சித்திரவதை முகாம்களில் அடைக்கவும் செய்தது.
இன்றுவரையிலும் தமிழர்களைப் புலிகள் என்றே இனவாத சிங்களத் தரப்பு அடையாளப்படுத்திக் கொள்கின்றது. அவ்வாறு கூறுகின்ற அதேதரப்பு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படக் கூடாது என்றும் கூறுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் இருக்குமாக இருந்தால் தமிழர்களை நினைத்த மாத்திரத்தில் கைது செய்யவும், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யவும் முடியும் என்று அந்த பேரினவாத தரப்பு நம்புகின்றது.
அதே தரப்பு தற்போது முஸ்லிம்களை குறிவைத்து தமது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கவும், முஸ்லிம்களின் குடிப்பரம்பலைத் தடுக்கவும் சிங்கள இனவாதிகள் முற்படுகின்றனர் என்ற சந்தேகம முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.
அதற்காகவே பௌத்த மதகுருமாரின் அமைப்புக்களின் பெயரால் முஸ்லிம்களுக்கு எதிரான போர் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிவாசல்களைத் தகர்த்தார்கள், பொருளாதார நிலையங்களை எரியூட்டினார்கள், முஸ்லிம்கள் நிலக் கொள்வனவு செய்வதையும் திட்டமிட்டுத் தடுத்திருக்கின்றார்கள். ஆனாலும் இத்தகைய இன ரீதியான தாக்குதல்களை மீறியும் முஸ்லிம்கள் தலை தூக்கி வருகின்றனர் என்ற ஆதங்கம் சிங்கள இனவாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே முஸ்லிம்களை சட்டரீதியாக ஒடுக்கவும் வேண்டும் என்ற சிந்தனை பௌத்த இனவாதிகளிடையே ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்திலேயே பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் கருத்து வெளியாகி இருக்கின்றது.
ஐ.எஸ் அமைப்பானது சர்வதேச அளவில் கொடூரமான மனிதக் கொலைகளையும், தாக்குதல்களையும் மேற்கொள்ளும் பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பில் இலங்கை முஸ்லிம்களும் இருக்கின்றார்கள் என்றால் அதை எதிர்கொள்வதற்கு நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டம் பிரயோகிக்கப்படும்.
தமிழ் மக்கள் மீது பயங்கரவாத சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது? – என்பது ஒன்றும் பரமரகசியம் அல்ல.
குறித்த சட்டமானது, தமிழர் குடியிருப்புக்குள் திடீரென்று சுற்றிவளைப்புக்களை செய்து சந்தேக நபர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களை விசாரணை இன்றி பல வருடங்களுக்கு சிறைகளில் அடைத்தது. பலரை விசாரணை எனும் பெயரில் சித்திரவதை செய்வதற்குத் துணை நின்றது.
அதேபோல் இனி முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் சுற்றிவளைக்கப்படலாம், சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்படலாம், விசாரணை எனும் பெயரில் வருடக்கணக்கில் அவர்கள் அடைத்து வைக்கப்படலாம் என்று முஸ்லிம்கள் அஞ்சுகின்ற நிலைமை தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறுகின்றபோது, வியாபாரப் போட்டி காரணமாக பழிவாங்கப்பட்டவர்கள், சொந்த விருப்பு வெறுப்புக்காக பழிவாங்கப்பட்டவர்கள், காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள். உள்நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோரே அதிகமாக உள்ளடங்குகின்றனர் என்பது பாதிக்கப்பட்டவர்களின் வாதமாக தற்போதும் இருக்கின்றது.
அதுபோல் எதிர்காலத்தில் வர்த்தக போட்டிக்காகவும், இனவாத வெறுப்புக்காகவும் முஸ்லிம்களை பழிவாங்குவதற்கு ஐ.எஸ்.ஐ என்ற பெயரும் பயங்கரவாத சட்டமும் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளுக்கிடையே, பொதுபல சேனாவினர், மட்டக்களப்பு சுமனரத்ன தேரர் போன்றோர், முஸ்லிம்களை அழிப்போம் என்றும், அவர்களை நாட்டைவிட்டு துரத்துவோம் என்றும் பகிரங்கமாக கூறுகின்றார்கள்.
இனவாதத்தை தூண்டிவிடும் விதமாக கருத்துக் கூறினாலோ, இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தூண்டும் விதமாகச் செயற்பட்டாலோ அவர்கள் மீது பாரபட்சமற்றவகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியபோதும், மட்டக்களப்பு பௌத்த மதகுரு கூறிய இனக்குரோத கருத்துக்கு எதிராகவோ, இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் அவரின் அடாவடித் தனத்திற்கு எதிராகவோ இன்றுவரையும் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சுமனரத்னவின் அடாவடித்தனமும், இனவாதமும், பொலிஸ், மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிரான வசைபாடல்களும், தாக்கதல்களும் உலகமறிந்த விடயங்கள். ஆனால் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறிய அரசாங்கம் என்ன செய்கின்றது?
ஒருவேளை தமிழர் தரப்பிலோ, முஸ்லிம்கள் தரப்பிலோ சுமனரத்தின தேரர் அளவுக்கு இனவாதமும், அடாவடித்தனமும் வெளிக்காட்டப் பட்டிருக்குமானால்,அந்த நேரமே கொழும்பிலிருந்து சென்ற விஷேட படைப்பிரிவு சம்மந்தப்பட்டவரின் வீட்டுக் கதவைத்தட்டி கைது செய்திருக்கலாம்.
தேசிய நல்லிணக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபடுகின்றவர்களாக சில பௌத்த மதகுருமாரே வெளிப்படையாக தெரிகின்ற நிலையில் அவர்கள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்காதது ஏன்? – என்ற கேள்வியும் எழுகின்றது.
இதற்கிடையே ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் கமால் குணரத்ன அண்மையில் கருத்துத் தெரிவிக்கும்போது,வடக்கு கிழக்குப் பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றார். இவற்றைப் பார்க்கும்போது, வடக்கு கிழக்கில் மீண்டும் புலிக்கதை கூறி தமிழ் மக்களை ஒடுக்க வேண்டும் என்ற மனோநிலை படைத்தரப்பிடையே தோற்றுவிக்கப்படுகின்றது.
ஆவா குழு போன்ற குழுக்களை கட்டுப் படுத்த இயலாத காவல்துறையின் இயலாமையை சரி செய்வதைவிடவும், எந்தக் காரணங்களோடு மீண்டும் இராணுவத்தை தமிழரின் சிவில் விவகாரங்களில் ஈடுபடுத்துவது என்றும், அதனை ஒரு சாட்டாக வைத்தக் கொண்டு ஒவ்வொரு தமிழனின் வீட்டு வாசலிலும் இராணுவத்தை நிறுத்துவது என்றுமே தென் இலங்கையில் சில தரப்புக்கள் சிந்திக்கின்றனவா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றுவதை தடுக்ககூடிய வலுவான சமிக்கைகள் எதனையும் பிரகாசமாய் காண முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்…
– ஈழத்துக் கதிரவன்.