திருகோணமலை மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபையின் சட்டங்களை மீறிய 25 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகரம், சீனக்குடா மற்றும் வெள்ளைமணல் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவ்வழக்கு பதியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றின் விலை அதிகமாக விற்கப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து வர்த்தக நிலையங்களை சோதனையிட்டபோது கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக விற்கப்பட்டதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய கோதுமை மா 100 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் 98 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய அரிசி 120 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலைப் இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று அனைத்து வர்த்தக நிலையங்களையும் சோதனையிட்டு வருவதுடன் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.