செவ்வாய்க்கிழமை வருட இறுதி நாளன்று இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்றது தனிப்பட்ட பிரச்சினை. என் மீதும் என் சார்ந்த அரசியல் நிலைப்பாட்டின் மீதும் தொடர்ச்சியான காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலர் இந்த சம்பவத்தோடு என்னை தொடர்புபடுத்தி கருத்துக்களைக் கூறி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்.
நேற்று இரவு செங்கலடியில் இடம்பெற்ற களேபரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
நேற்று இரவு மதுபோதையில் இருந்த வியாழேந்திரனின் ஆதரவாளர்கள், ரகளையில் ஈடுபட்டதாகவும், இதில் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர் விளக்கமளிக்கையில்,
பாதிக்கப்பட்டவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும் அதற்காக நான் மனம் வருந்துகின்றேன். இதற்கு யாரும் அரசியல் சாயம் பூசி குளிர்காய வேண்டாம். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சில மணி நேரங்களின் பின் நான் சென்றிருந்தேன்.
அங்கு கடமையில் ஏறாவூர் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். நீதியின் அடிப்படையில் விசாரணையினை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி போலிசாரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கமைய பொலிசார் செயற்படுகின்றனர்.
நான் அறிந்த வரையில் ஒரு தரப்பினர் முதலில் அடுத்த தரப்பினர் மீது வெடி கொளுத்தி போட, மற்றைய தரப்பினர் கண்ணாடியை உடைத்ததாக அறிகின்றேன். இதனை வைத்துக்கொண்டு என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியலாக்க முற்படுகின்றனர்.
தவறு இழைத்தவர்கள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளேன்.
ஆனால் இவர்கள் போன்றவர்களின் கருத்தானது என் மீது உள்ள தனிப்பட்ட முரண்பாட்டினால் பல நாள் காத்திருந்து கிடைத்த சந்தர்ப்பத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது போல் உள்ளது. இத்தகைய என்மீது சேறு பூசும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். தொடரும் பட்சத்தில் இந்த போலித்தனமான கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நான் பின் நிற்கப் போவதில்லை.
உங்கள் உடன் யாராவது உரசினால் அவர்கள் உடன் உரசுங்கள். என் பெயரை இழுப்பது உங்கள் இயலாமையின் வெளிப்பாடோ என எண்ணத் தோன்றுகிறது. தயவு செய்து தங்களது அரசியல் வங்குரோத்து நிலைக்கு இதனை பயன்படுத்தி கொள்வதை நிறுத்துங்கள்.
இந்த சம்பவத்திற்கும் எங்களது அரசியல் செயற்பாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த சமயத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டம் தனது கடமையைச் செய்யும். இதனை வைத்து யாரும் அரசியல் செய்ய முயன்றால் அல்லது இதனை வைத்து எதிர்க் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க நினைப்பது அவர் அவர் அரசியல் வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்டுவதாக அமையும். வேண்டாம் என தயவாக கூறுகிறேன் என்றார்.