புற்றுநோய் காரணமாக தன்னுடைய தாயாரை இழந்த நிலையில் தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று, தாயின் கனவை நனவாக்கி இருக்கின்றார் விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சந்திரகுமார் டர்சன்.
கடந்த 2017 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக தன்னுடைய தாயாரை இழந்த நிலையிலும் தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கனவுடன் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி இருந்த விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சந்திரகுமார் டர்சன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் 3A பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளார்
விசுவமடு மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் டர்சன் என்ற மாணவன் விசுவமடு பாரதி மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்று தொடர்ந்து உயர்தரத்தில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் கல்வி பயின்று வந்தார்.
இந் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவருடைய தாயாரான சந்திரகுமார் லோகேஸ்வரி புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில், தாயினுடைய கனவான தான் ஒரு பொறியியலாளராக வர வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு கல்வியைத் தொடர்ந்த மாணவன் அண்மையில் வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்று தனது தாயின் கனவை நனவாக்கி பெருமை கொள்வதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அத்தோடு தங்களுடைய கிராமத்தில் தான் முதலாவது பொறியியலாளர் எனவும் தான் பொறியியலாளராக வந்து இந்த மக்களுக்கு தன்னாலான சேவைகளை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசுவமடு மகா வித்தியாலய மாணவன் த. லக்சன் கணிதப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3A பெற்று இரண்டாவது நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.