ஜனாதிபதி தொடர்பாக தேர்தல் காலங்களில் மக்களை திசைதிருப்ப சொல்லப்பட்ட விடயங்கள் தற்போது பொய்யாகியுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புதுவருட தினத்தில் அனைவருக்கும் சாந்தியும், சமாதானமும், சுபீட்சமுமாக வாழக் கூடிய நிலையை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். இந்த வருடத்தில் எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆட்சியில் அனைவரும் சுபீட்சமாக வாழக் கூடிய, அவர்களது தேவைகளை இனங்கண்டு பூர்த்தி செய்யக் கூடிய, அவர்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி வாழக் கூடிய ஒரு ஆட்சி அமைந்துள்ளது.
அந்த ஆட்சியில் அவர்கள் எதிர்பார்த்த அனைத்து விடயங்களும் நல்ல படியாக கிடைப்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் செயற்படுத்தும். அதன் மூலம் மக்கள் நல்ல பயன்களை பெற முடியும்.
அத்துடன், தற்போதைய கைதுகள் கடந்த காலங்களில் அவர்கள் செய்த பிழையான மற்றும் பொய்யான நடவடிக்கைகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
அந்த அடிப்படையில் நீதித்துறையும், காவல் துறையும் தன்னுடைய கடமையைச் செய்கின்றன. என் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட கிராம மக்கள் என்னுடன் நல்ல முறையில் பழகுபவர்கள். படித்தவர்கள், மார்க்க அறிஞர்கள் எனப் பலரும் இருக்கின்றார்கள்.
அதுபோல் ஒரு சில பிழையான நபர்களும் இருக்கின்றார்கள். சில தூண்டுதலின் அடிப்படையில் இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.
அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு சிலரை சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் அம் மக்களுடைய கருத்து. ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் அங்கு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்டும் இருக்கிறார்.
தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. எதிர்காலத்தில் அவ்வாறு இல்லாமல் அவர்களை நாம் திருத்தி ஜனநாயக வழியில் அவர்களை உட்படுத்தி அவர்களையும் திருத்திக் கொண்டு செல்லலாம் என நினைக்கின்றேன். இந்த விடயம் தற்போது காவல்துறைக்கு சென்றுள்ளதால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பர்கள்.
அந்தக்கிராமத்தின் பேருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக தொடர்ச்சியாக ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள இளைஞர்களை அடாவடித்தனம், அராஜகம் செய்ய அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த நிலை மாற்றமடையும்.
எங்களுடைய ஜனாதிபதி சம்மந்தமாக தேர்தல் காலங்களில் செய்யப்பட்ட பிரச்சாரங்களும், அவர் சம்மந்தமாக மக்களை திசை திருப்புவதற்காக சொல்லப்பட்ட ஒவ்வொரு கருத்துக்களும் தற்போது பொய்யாகியுள்ளது.
நல்லதொரு ஜனாதிபதி என மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் அரசியலை வெறுப்புணர்வுடன் பார்த்த கடந்தகால நிலையை மக்கள் மத்தியில் இல்லாமல் ஆக்கி ஒரு சுபீட்சமான காலமாக ஜனாதிபதி உருவாக்குவார்.
தேசிய கீதம் முன்னர் இரண்டு மொழிகளில் பாடப்பட்டது. தேசிய கீதம் என்பது மக்களின் உணர்வையும், மக்களையும் ஒருமுகப்படுத்தும் விடயம். இதில் சர்ச்சையை ஏற்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் முடிவு எடுக்க வேண்டும். இரு மொழிகளில் பாடுவது பாரிய பிரச்சினை அல்ல என்பது எனது கருத்து.
தற்போது ஒவ்வொரு கிராம மட்டங்களுக்கும் சென்று மக்களது தேவைகளை கேட்டு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
கிராமத்தில் இருந்து மக்களின் தேவைகளை இணங்கண்டு உரிய வகையில் கொண்டு சென்று பாரிய அபிவிருத்தியை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.