புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா? என்ற கேள்வி கடந்த பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிறைந்து போயுள்ளது.
பதவிக்கு வந்த அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்த போதிலும், அவை எதுவும் நிறைவேற்றப்படாமையே வரலாறாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இதனால் தமிழ் மக்கள் மிகுந்த விரக்திக்கும் வேதனைக்கும் முகம் கொடுத்தமைக்கப்பால், நிறைந்த நம்பிக்கையீனங்களுக்கும் ஆளானார்கள்.
இன்று வரை அந்த விதமான நிலைமைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வை முன்வைக்க முயன்றால், பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு துரோகமிழைத்த நிலைக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சமே சிங்கள அரசியல் தலைவர்களிடம் காணப்படுகின்றது.
அதற்குப் பிரதான காரணம் பேரினவாத அரசியல் தலைவர்களும் கடும் போக்காளர்களும் சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொண்டுவரும் தவறான பிரசாரங்களேயாகும்.
அரசியல் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட அரசியல்வாதிகள், இந்தவிதமாக இனவாத சக்திகளையும் கடும் போக்காளர்களையும் தமது வலைக்குள் வீழ்த்தி மக்களைத் தூண்டிவிடும் காரியங்களிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மாத்திரமின்றி, தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு தொடர்பில் இதுவரை பதவி வகித்த “தேசியத்தலைவர்கள்” என்று கூறிக்கொள்வோர் போலியான ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் மேற்கொண்டு வந்தமையும் சர்வதேச சமூகம் அறிந்த ஒன்றாகும்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேசிய இனப்பிரச்சினைக்கு பதின்மூன்று பிளஸ் தீர்வை முன்வைப்பதாக இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.
இறுதியில் அவரது வாக்குறுதி எவ்வாறு “காற்றில் பறந்தது” என்பது உலகறிந்த விடயம். தற்பொழுது அவரே, நாட்டை பிரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக பகிரங்கமாக மேடைகளில் கூறிவருகிறார்.
இதன்மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் தீர்வுகாண அவர் எந்தளவுதூரம் சித்தமாக இருந்துள்ளார் என்பதையும் கணித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அரசியல்வாதிகளும் சரி, அரசியல் தலைமைத்துவங்களும் சரி அதிகார மோகத்துக்கும் சுய இலாபங்களுக்கும் மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் கைங்கரியங்களிலேயே அன்று தொட்டு இன்றுவரை ஈடுபட்டு வருகின்றமை யதார்த்தமாகும்.
ஆளுந்தரப்பில் இருக்கும்போது ஒன்றைக் கூறுவதும் பின்னர் அதனை தலைகீழாக மாற்றிக் கூறுவதும் அவர்களுக்குக் கைவந்த கலை என்பதை மக்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளனர்.
இன்று தேசிய இனப்பிரச்சினை உள்நாட்டு யுத்தம் வரை சென்று இறுதியில் பல்வேறு இழப்புகளுடன் முடிவுக்கு வந்துள்ளமைக்கு இந்த நாட்டின் அரசியல்வாதிகளே காரணம் என்றால் அதனை எவராலும் மறுக்கமுடியாது.
இன்றும்கூட அதற்குத் தீர்வைக் காணமுடியாதவாறு முட்டுக்கட்டைகளைப் போடுபவர்களாகவே பல்வேறு அரசியல்வாதிகளும் காணப்படுகின்றனர்.
இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அழைப்பு இன்றைய காலத்தின் தேவை என்பதை சகல தரப்பினரும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
வட்ட மேசையில் ஒன்று கூடி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் முன்வாருங்கள்’ என புத்திஜீவிகள், மதத் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மீளவும் அதிகாரத்தைக் கைப்பற்ற, மஹிந்த ராஜபக்ச நாட்டைப் பிரிப்பதாகக் கூறுவதானது இலங்கைக்கே துரதிஷ்டவசமானதாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழனன்று நடைபெற்ற வரவு — செலவுத் திட்டத்தின் நல்லிணக்கம், தேசிய கலந்துரையாடல் அனர்த்த முகாமைத்தவ அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின் போதே, ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இலங்கையில் இனப்பிரச்சினை என்பது புதியதல்ல. 1930 ஆம் ஆண்டு முதல் 8 தசாப்தங்களுக்குள் சிங்கள – முஸ்லிம், சிங்கள,- தமிழ் ஆகிய இனக்கலவரங்கள் பல தடவைகள் நடந்தேறியுள்ளன.
இதன் காரணமாக நாட்டு மக்களிடையே குரோதமும், சந்தேகமும், பீதியும் மேலோங்கியதுடன் நாட்டின் முன்னேற்றத்தை தகர்த்தெறிந்து விட்டன. இதனால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் எமது தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்கு முனைந்த போதும், நிறைவேறவில்லை என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பண்டா — செல்வா ஒப்பந்தத்தின் மூலமாக தீர்வு வழங்க முனைந்த போது பிக்குகள் ஒன்றுகூடி எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயக்காவிடம் ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டுமெனக் கோரிய போது, அவர் தனது பைக்குள் இருந்த ” லைட்டரை” எடுத்து ஒப்பந்தத்தை எரித்தார்.
அதேபோன்று டட்லி— செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இதன் பின்னர் கொடூரமான யுத்தத்துக்கே முகம் கொடுக்க நேரிட்டது என்று கடந்த கால சம்பவங்களை நினைவூட்டியுள்ளார்.
1983 கறுப்பு ஜுலை கலவரம் பிரபாகரனுடன் யுத்தம் செய்ய வழி வகுத்தது. யுத்தம் தெற்குவரை சென்றது. பின்னர் தலதா மாளிகை வரை வந்தது. ஆர். பிரேமதாஸா முதல் பல பிரமுகர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று தோட்டா சத்தம் ஓய்ந்தாலும் நிலையான சமாதானம் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி யதார்த்தபூர்வமான தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
உண்மையிலேயே இனப்பிரச்சினை கடந்த கால அரசியல் தலைமைத்துவங்களினால் இழுத்தடிக்கப்பட்டதுடன் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதன் விளைவாகவே அது தேசியப் பிரச்சினையாக உருவெடுத்ததுடன் எல்லை தாண்டி சர்வதேசத்தின் கதவுகளையும் தட்டிவிட்டுள்ளது என்பதை அரசியல் தலைமைத்துவங்கள் உணர்வது அவசியமாகும்.
அதுமாத்திரமன்றி, தமிழ்பேசும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிகளை ஒரு சில சிங்கள, ஆங்கில ஊடகங்களும் அவர்களால் நடத்தப்படும் ஊடகங்களும் திரித்துக் கூறுவதிலும் மிகைப்படுத்துவதிலும் தவறான கருத்துக்களை பரப்புவதிலும் கடந்த பல தசாப்த காலமாக முன்னின்று உழைக்கின்றன.
இதனால் உண்மை நிலைமை சாதாரண சிங்கள மக்களுக்குத் தெரியாது போவதுடன், அவர்கள் தமிழ் மக்களை விரோதிகளாகவே பார்க்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைக்க ஜனாதிபதி முன்வர வேண்டும்.
அதன்மூலமே உண்மையான நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் இனங்களிடையே உருவாக்கக்கூடியதாக இருக்கும்.
மாறாக, இதே நிலைமை தொடருமானால் அது இந்த நாட்டையும் பெரும்பான்மை சிங்கள மக்களையும் தவறானதோர் மாயைக்குள் சிக்க வைப்பது மாத்திரமின்றி, சர்வதேசத்திலிருந்தும் அந்நியப்படுத்தவே வழிவகுப்பதாக இருக்கும் என்பதையும் மறந்து போகக்கூடாது.
மேலும், இந்நாடு சகலவிதமான நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்க பிரதான காரணம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் சிதைக்கப்பட்டமையும் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டமையுமாகும் என்ற யதார்த்தத்தை இனிமேலும் அரசியல் தலைமைத்துவங்கள் சரிவர உணரத் தவறுமேயானால் அது நாட்டின் சாபக்கேடாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
குறைந்தபட்சம் ஜனாதிபதியின் இந்த அழைப்புக்கேனும் செவி சாய்க்க வேண்டியது இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் அனைவரதும் கடப்பாடு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.