கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அதனையடுத்து உடனடியாக பொலிஸார் குறித்த பெண்ணின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி கிராமத்துக்கு சிவில் உடை தரித்த பொலிஸாரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்துவதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்போது ஊற்றுபுளம் சந்தியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு குழந்தையுடன் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் 30 லீட்டர் கசிப்புடன் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோணாவில் ஜூனியன் குளத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து கசிப்பு உற்பத்தி செய்யும் இடைத்த சுற்றிவளைத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பரல்கள் கொள்கலன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளார்கள். இதையடுத்து பொலிசாரும் கிராம மக்களும் அந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
எனவே இம்மக்களை போன்றும் இளைஞர்களைப் போன்றும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்றால் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கசிப்பு உற்பத்தியை முழுமையாக நிறுத்த முடியுமென்று கோணாவில் காந்தி கிராமத்துக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.