ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த மேலும் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ராஜபக்ச அரசாங்கத்தின் ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இழைத்த தவறுகளுக்காகவே அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கூறும் இராஜாங்க அமைச்சர் இதனால் எதிர்வரும் நாட்களில் பலர் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் தற்போதைய ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் கொம்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முன்னாள் அமைச்சர்களின் கைதுகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்கள் என ஐக்கிய தேசிய முன்னணி உட்பட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், ஆட்சியில் இருந்த போது அவர்கள் மேற்கொண்ட தவறுகளுக்காகவே அவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ராஜபக்ச அரசாங்கத்தினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தாமரைமொட்டுக் கட்சியென அழைக்கப்படும் பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவைப் போல் மேலும் பலர் தாங்கள் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அடுத்து வரும் நாட்களில் வைத்தியசாலைகளுக்கு செல்வார்கள் என்று கூறினார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“வைத்தியரே அவருக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை தீர்மானிப்பார். அதனால் இதற்கு முன்னரும் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தத்தமது மனசாட்சியின் கீழ் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வோமெனின் யாரும் பயப்படத் தேவையில்லை என்பதைத் தெரிவித்திருந்தேன்.
நாம் கடந்த 5 ஆண்டுகளாக எதிர்கட்சியில் இருந்தோம். ஆனால் நாம் பயந்து கொண்டு இருக்கவில்லை. சரியானதை மேற்கொண்ட காரணத்தினால் பயப்படவோ ஒழிந்து கொள்ளவோ இல்லை. தற்போது தவறுகளை மேற்கொண்டதால் இவர்கள் பயந்து இவ்வாறு செயற்படுகின்றனர். இந்நிலையில் நாட்டு மக்களிடம் தவறுகளை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா என்ற கேள்வி காணப்பட்டது.
நாம் எந்தவொரு காரணத்தின் கீழும் அரசியல் செயற்பாடுகளுக்காக பொலிஸ் திணைக்களத்தினையோ நீதிமன்றத்திலேயோ தலையீடு செய்யப் போவதில்லை. ஆனால் அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஊழல் மோசடி விசாரணைத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் உள்ளன.
அவை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அவை உண்மையென நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். குறித்த விடயத்தினால் எதிர்வரும் காலத்தில் மேலும் பலருக்கு நோய்கள் தீவிரமடைந்து வைத்தியர்களை சந்திக்க நேரிடும்.
ஏனெனில் அவர்களது மனசாட்சி அவர்கள் தவறு செய்தார்கள் என்பதை அறியும். சட்டத்தினால் இதற்கு தீர்வினைப் பெற்றுத்தர சில சந்தர்ப்பங்களில் முடியாமல் போகலாம். எனினும் நாட்டு மக்கள் மார்ச் மாதத்தைத் தொடரந்து இடம்பெறவுள்ள தேர்தலில் இவ்வாறான நபர்களுக்கு எவ்வாறு தண்டனை வழங்கலாம் என்பது குறித்த தீர்மானத்தினை எடுக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேவேளை கடந்த மாதம் முடிவுறுத்தப்பட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தாம் எந்தவொரு பயமும் இன்றி நாளைய தினம் நடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாளைய தினம் நாடாளுமன்றில் ஜனாதிபதிப கோட்டபாய ராஜபக்ச உரையாற்றவுள்ளார். அதனால் எந்தவொரு காரணத்திற்காகவும் நாடாளுமன்றத்தினை ஒத்திவைக்கப் போவதில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. 69 லட்ச மக்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
எனினும் இந்த நாடாளுமன்றில் 69 லட்சம் மக்களின் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. அதனாலேயே இந்த நாடாளுமன்றம் களைக்கப்பட வேண்டும் என நாம் தெரிவிக்கின்றோம். மக்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றக்கூடிய நாடாளுமன்றினை உருவாக்க வேண்டும்.
ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறுகின்ற முதல் வாய்ப்பிலேயே அவர் அதனை மேற்கொள்வார் என நாம் எதிர்பார்க்கின்றோம். எமக்கு 19 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றினை கலைக்க முடியாத காரணத்தினால் மேலும் 2 – 3 மாதங்களுக்கு இவ்வாறு பயணிக்க நேரிடும். அதனால் நாம் எந்தவொரு காரணத்தினாலும் நாடாளுமன்றினை மீண்டும் தள்ளிவைக்கப் போவதில்லை. நாம் எந்தவொரு பயமும் இன்றி சவாலுக்கு முகம்கொடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.