கிழக்கு மாகாணத்தில் 5,914 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் ஆறு பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் திருகோணமலையில் 12 வைத்திய சுகாதார அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 282 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். அத்துடன் குறிஞ்சாஞ்கேணி, தம்பலகாமம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை திருகோணமலை மாவட்டத்தில் 2,276 டெங்கு நோயாளர்களும், கல்முனை பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியில் 1132 டெங்கு நோயாளர்களும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் 2218 டெங்கு நோயாளர்களும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 5914 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதுடன் 9 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை அதிகளவில் அரச திணைக்களங்கள் மற்றும் அரச அதிகாரிகள் வாழ்ந்து வரும் காணிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் சிரமதான பணிகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.