ஐ .எஸ் அமைப்பில் இணைவதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து சிரியாவுக்கு ஓடிய பெண் ஒருவரின் குடியுரிமையை அரசு பறித்துள்ளது.
அவருக்கு ஐ .எஸ் அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த பிரெஞ்சு சுவிஸ் பெண்ணின் குடியுரிமையை சுவிஸ் அதிகாரிகள் பறித்துள்ளார்கள்.
தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியிருந்தாலும், அவர் ஜெனீவாவில் வளர்ந்தவர் என்றும், தனது இரண்டு மகள்களுடன் அவர்களுடைய தந்தைகளுக்கு தெரியாமல் சிரியாவுக்கு ஓடி, அங்கு ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரை மணந்து அவருடைய குழந்தைக்கு தாயானதாகவும், அந்த தீவிரவாதி 2018இல் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது அவர் தனது மூன்று பிள்ளைகளுடன் சிரியாவிலுள்ள முகாம் ஒன்றில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் மூத்த இரண்டு மகள்களும் சுவிஸ் குடிமக்கள் என்பதால், அவர்களை மட்டும் எப்படியாவது சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வர சுவிஸ் அரசு எவ்வளவோ முயன்றும், அவர்களது தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை கொண்டு வரும் முயற்சி வெற்றிபெறவில்லை.