நேற்றைய தினம் எட்டாவது நாடாளுமன்றத்தில் நான்காவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியதுடன் இலங்கையின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்திற்கு பதிலாக வேறு ஆசனத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவுக்கு சம்பிரதாயபூர்வமாக எதிர்க்கட்சி வரிசையில் 8 ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு 7ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆசனத்தை நிராகரித்துள்ள ரணில் விக்ரமசிங்க தனக்கு 9ஆவது ஆசனத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து 7ஆவது ஆசனம் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஏனைய முதல் வரிசை ஆசனங்கள் ஐக்கிய தேசிய முன்னணியின் ஏனைய கட்சித் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.