இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இலங்கையில் தங்கியிருப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கும், தொற்று நோய் பரவும் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனையை நிறுத்துமாறு இலங்கை தூதரகம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய சுகாதார அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் தயாரித்த யோசனை ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை காரணமாக வெளிநாட்டவர்கள், முதலீட்டாளர்கள் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தூதரக அலுவலகம், அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் இந்த யோசனைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் தொற்று நோய் பரவுவதனை தடுக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டு இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மலேரியா, யானைக்கால் நோய், தட்டம்மை, தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் எயிட்ஸ் போன்ற தொற்று நோய்களை ஒழித்த நாடாக இலங்கையை, உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த நோய்கள் மீண்டும் இலங்கைக்கு பரவுவதனை தடுக்கும் நோக்கில் வெளிநாட்டவர்களுக்காக வைத்திய பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.