முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அரசாங்கத்தால் தமக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியை மீண்டும் ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகியுள்ளதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையில் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க,
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டமை சட்டரீதியானது என்றாலும், அவரை கைதுசெய்த முறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
குறித்த அனுமதிப்பத்திரத்தின் பின்புறத்தில், நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் இருக்கும் வரை அது செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சட்டத்தரணி ஒருவர் என்னிடம் கூறினார்.
அவ்வாறு என்றால், நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் அவர் பதவியில் இருக்கும் வரை செல்லுபடியாக வேண்டும்.
ஆயுதங்கள் தொடர்பில் முழுமையாக கட்டுப்பாட்டு பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிடம் காணப்படுகின்றது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. அதற்கான முறையொன்று உள்ளது.
உத்தியோகப்பூர்வ ஆயுதங்களை வழங்கிவிட்டு கைதுசெய்வது எந்த விதத்தில் நியாயமான நடவடிக்கை. எனவேதான், எம்.பிக்களின் பாதுகாப்புக்கென வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டில் தற்போது பாதுகாப்பு இல்லை” என்றார்.