இந்திய அணியின் ஆல் ரவுண்டரான இர்பான் பதான், சங்ககாராவுடன் ஏற்பட்ட மோதலும், அதன் பின் எப்படி இருவரும் நண்பர்களாக மாறினோம் என்பது குறித்தும் தற்போது ஓய்வுக்கு பின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஒரு சரியான ஆல் ரவுண்டர் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, கடந்த 2003-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் மூலம் அறிமுகமாகி தன்னுடைய திறமையை நிரூபித்து,சிறந்த ஆல் ரவுண்டர் என காட்டியவர் தான் இர்பான் பாதன்.
அதன் பின் இந்திய அணியின் வெற்றிகள் பலவற்றிற்கு முக்கிய காரணமாக இருந்த இர்பான் பாதன், இளம் வீரர்களின் வருகை மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக இர்பான் கடுமையான போராடி வந்தாலும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு இளம் வீரர்களும் சொதப்பாத காரணத்தினால் தேர்வு குழுவினர் இர்பானை கண்டுகொள்ளவே இல்லை.
இதனால் சில ஆண்டுகள் காத்திருந்த இர்பான் நேற்று முன் தினம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஓய்வுக்கு அவர் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத அனுபவம் குறித்து கூறினார். அதில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாராவுடன் ஏற்பட்ட மோதல் பற்றி கூறும் போது, டெல்லியில் இலங்கை-இந்திய அணி மோதிய டெஸ்ட் ஆட்டத்தின் போது இரண்டாவது இன்னிங்ஸில் சேவாக்கால் துவக்க வீரராக இறங்க முடியாத காரணத்தினால், நான் துவக்க வீரராக இறங்கினேன்.
அந்த போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்தேன், அப்போது இலங்கை அணி தோல்வி அடையும் நிலையில் இருந்ததால், சங்ககாரா என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாக எனது பெற்றோர் குறித்து மோசமாகப் பேசினார்.
உடனே நானும் பதிலுக்கு அவரது மனைவி பற்றி பேசினேன். இந்த சம்பவத்துக்கு பிறகு எங்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது.
அதன் பின் சில காலம் கழித்து இருவருமே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாட வேண்டியிருந்தது. அப்போது சங்ககாரா அவரின் மனைவியிடம் இவர் தான் உன்னைப் பற்றி தவறாக பேசினார் என்று கூறினார். நான் அப்போது மன்னிப்பு கேட்டேன், உடனே சங்ககாரா நான் தான் முதலில் பெற்றோரை ஏசும் விதமாக பேசியதால் அவர் உன்னை பற்றி பேசியதாக கூறினார்.
அதன் பின் இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று கூறி முடித்தார்.