ஈரானின் அதிரடி ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துருப்புகள் பல கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஈரானின் முக்கிய பகுதியை நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் அருகே புதனன்று அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பில் உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், இதே பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஈரானை பொறுத்தமட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் அதிரடி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக உலகம் அறியத்தொடங்கிய வேளையிலேயே ஈரானை இந்த நிலநடுக்கம் உலுக்கியதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்றும் தெஹ்ரான் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனிடையே உக்ரைன் விமானமானது தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க துருப்புகளால் படுகொலை செய்யப்பட்ட குத்ஸ் படைகளின் தலைவர் குவாசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே வேளை, ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.