உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணையதளத்தின் மூலம் வங்கி கணக்குக்கான வரவு-செலவுகளை செய்வதுதான் ‘நெட் பாங்கிங்’ முறை. இப்போது பலர் ‘ஸ்மார்ட் போன்தான்’ பயன்படுத்தி வருகிறார்கள். கூடுதலாக சிலர் பட்டன் வடிவிலான செல்போனை வைத்திருப்பர். ஸ்மார்ட் போன் இருப்பதால், சம்பந்தப்பட்ட வங்கியின் ‘ஆப்ஸ்’சை(செயலி) பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எளிதாகி விட்டது. தற்போது ‘நெட் பாங்கிங்’ மோசடி அதிகரித்து விட்டது.
இது தொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பலர் ‘நெட் பாங்கிங்’ மூலம் தங்கள் வங்கி கணக்கை கையாளுகிறார்கள். இதை மோசடி ஆசாமிகள் பயன்படுத்தி நூதனமாக பணத்தை ‘அபேஸ்’ செய்து விடுகிறார்கள். உங்கள் செல்போன் எண்ணுக்கோ, அல்லது இ-மெயில் மின்னஞ்சல் முகவரிக்கோ உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து தகவல் வரும்.
அதில் உங்கள், செல்போன் எண் அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசு கிடைக்க இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் சமூக சேவை செய்வதற்காக ரூ.1 கோடியை உங்களுக்கு அனுப்ப உள்ளோம். இதற்காக நாங்கள் அனுப்பும் இ-மெயில் முகவரிக்கு உங்கள் பெயர், செல்போன் எண், வங்கி கணக்கு எண் என முழுமையான விவரத்தை அனுப்பி வைக்குமாறு கேட்கப்படும். இதற்கு, ‘பிஷ்ஷிங் நெட்’ என்று பெயர்.
அந்த இ-மெயிலை திறந்து நீங்கள் அதில் தகவல் அனுப்பினாலே அதிலிருந்து வரும் வைரஸ் உங்கள் கணினியில் வந்துவிடும். அதன் பின்னர், உங்கள் இ-மெயிலில் இருந்து அனுப்பும் அனைத்து தகவல்களும் மோசடி ஆசாமிகளின் மெயிலுக்கு சென்று கொண்டே இருக்கும். ‘நெட் பாங்கிங்’ மூலம் வரவு-செலவு செய்பவர்கள் அவர்களின் பாஸ்வேர்டை இ-மெயில் மூலம் அனுப்பும்போது அந்த ரகசிய எண்ணும் மோசடி ஆசாமிக்கு சென்று விடும். இதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்து கொள்வார்கள்.
மோசடி ஆசாமிகள், கணக்கு வைத்திருப்பவர்கள்போல பாஸ்வேர்டை பயன்படுத்தி வங்கிக்கு மெயில் அனுப்பி, “என் கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்தை நாங்கள் குறிப்பிடும் மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றுங்கள்” என்று தகவல் அனுப்புவார்கள். மற்ற வங்கிக்கு பணத்தை பரிமாற்றம் செய்த பின்னர்,மோசடி ஆசாமிகள், அந்த பணத்தை ‘நெட் பாங்கிங்’ மூலம் வெளிநாடுகளில் உள்ள வங்கிக்கு மாற்றி விடுவார்கள். இந்த மோசடி வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கே தெரியாது. வங்கி பணத்தை சரிபார்க்கும்போதுதான் தெரியவரும்.
மேலும் உங்களுக்கு விலை உயர்ந்த கார் பரிசு விழுந்திருக்கிறது. எனவே, நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்துங்கள் என்று செல்போனில் வரும் குறுந் தகவல்களை (எஸ்.எம்.எஸ்.) நம்பி பலரும் பணத்தை இழக்கிறார்கள்.
இந்த மோசடியை தவிர்ப்பதற்காக இ-மெயில் மூலம் பணம் மாற்றுமாறு தகவல் அனுப்பினால், அதற்கான ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை வங்கியில் கணக்கு வைத்திருப்போரின் செல்போன் எண்ணிற்கு வங்கி நிர்வாகம் அனுப்பும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒருசில வங்கிகள்தான் இந்த பாதுகாப்பு முறையை கடைபிடிக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.