மண் அகழ்வதில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து வரையறுக்கப்பட்ட ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர் சங்கத்தினர் இன்று புதன்கிழமை (08) ஓட்டமாவடி காகிதநகர் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மண் அகழ்வு நடவடிக்கைகள் மாவட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிரான் பிரதேச செயலக பிரிவில் குறிப்பிட்ட சிலர் மண் ஏற்றுவதாகவும், தங்களது அமைப்பினர்களுக்கு பிரதேச செயலகத்தினால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சுமத்தியுள்ள அவர்கள், தமது அமைப்புக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரையறுக்கப்பட்ட ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர் சங்கத்தினால் மண் அகழ்வு இடம் பெறும்போது நேரடியாக முந்நூறு பேரும் மறைமுகமாக நூற்றுக்கணக்கானோரும் தங்களது ஜீவோனோபாயத்தினை நடத்திவந்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மண் அகழ்வில் தடைவிதித்தால் அனைவருக்கும் அந்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், குறித்த சிலருக்கு அது சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுனவிடம் கையளித்துவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.