தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவும் நல்லிணக்க அடையாளமாகவும் இந்த அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், தேசிய நல்லிணக்க உறவால் கிடைத்த அமைச்சு அதிகாரத்தை சிறந்த முறையில் செயற்படுத்தி காட்டுவேன் எனவும் காணாமல் போனவர்களின் உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் தேட அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றது போல், முடிந்தளவு மக்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்ததினை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குறிப்பிடத்தக்களவு வாக்குகளை வழங்காத போதிலும், ஜனாதிபதி தன்னுடைய பதவியேற்வு நிகழ்வில் தெரிவித்ததைப் போன்று தமிழ் மக்கள் உட்பட நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்ற வகையில் தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கும் அங்கீகாரமாகவே என்னுடைய அமைச்சுப் பதவி பலராலும் கருதப்படுகிறது.
அதேவேளை, தேர்தல் முடிவுகள் வெளியான மறுகணத்தில் இருந்தே தமிழ் மக்கள் தாம் விட்ட தவறுகளை எண்ணி எம்முடன் மனம் விட்டுப் பேசி வருந்தத் தொடங்கி விட்டார்கள். மக்களின் இத்தகைய மனமாற்றங்கள் கடந்த காலங்களை போலன்றி நிரந்தரமானதாக நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இனிவரும் காலங்களில் மக்கள் தமது ஆதரவை யானைக்கு வழங்காமல் நான் கேட்கும் ஆணைக்கு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் அதுவரை காத்திருக்காது கிடைத்திருக்கும் அதிகாரத்தினை பயன்படுத்தி தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழ் மக்களின் அவலங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற தமிழ் கட்சிகள், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமுமின்றி கடந்த ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்து இருந்துவிட்டு, சாத்தான்கள் வேதம் ஓதுவது போன்று ஏதோ பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்பது ஒரு சிலரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களாக இருக்கலாமே தவிர, அரசாங்கத்தினால் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளபடவில்லை.
சுயலாப தமிழ் கட்சிகளின் தவறான வழி நடத்தலை எண்ணி தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் வஞ்சித்து விடாது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஊடக பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு