கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல பொய்களை கூறியே ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உடுகம்பொல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை வழங்குவதாக மிகப் பெரிய பொய்யை கூறியது. ஊடக சுதந்திரம், நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறினார்கள்.
எனினும் தற்போது ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்த குரல் பதிவுகள் மூலம் நல்லாட்சி அரசாங்கம் எப்படி செயற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
தமது அரசியல் எதிராளிகளை பழிவாங்க நீதித்துறை சுதந்திரத்தை முற்றாக மீறியுள்ளது. அரசியல் எதிராளிகளை பழிவாங்குவது ஐக்கிய தேசியக் கட்சியின் பிறப்பிலேயே ஏற்பட்ட குணம். அவர்கள் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் எதிராளிகளை பழிவாங்கினர்.
கடந்த அரசாங்கம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. இப்படியான சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போன்று அன்றாடம் பயணிக்கும் அரசாங்கம் அல்ல. நாங்கள் திட்டமிட்டு வேலை செய்வோம்.
அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு போக்கிடம் இல்லாமல் போகும். சஜித் பிரேமதாச தற்போது மீண்டும் நகைச்சுவை கதைகளை கூற ஆரம்பித்துள்ளார்.
கோட்டாபாய ஜனாதிபதி – சஜித் பிரதமர் என சஜித் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நாட்டு மக்கள் இவற்றுக்கு ஏமாற மாட்டார்கள்.
ஜனாதிபதியுடன் பணியாற்றக் கூடிய பிரதமரையே தெரிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இரண்டு பக்கம் இழுப்படும்.
இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் நாற்காலியில் மகிந்த ராஜபக்சவை அமர வைப்பார்கள் என்பது நிச்சயம் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.