வெள்ளை வான் ஊடக சந்திப்பை நடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த பிணை உத்தரவிற்கமைய சட்டமா அதிபர் மீள்பரிசீலனை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கியமை சட்ட விரோதமானது என சட்டமா அதிபர் தனது மீள்பரிசீலனை மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன பிணை வழங்கி உத்தரவிட்டார்.
எனவே ராஜித சேனாரத்னவுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரியே சட்டமா அதிபர் இந்த மீள்பரிசீலனை மனுவை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபரின் தொடர்பாடல் அதிகாரி சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்தார்.
அத்துடன் இந்த மீள்பரிசீலனை மனுவை விசாரித்து நிறைவடையும் வரை ராஜித சேனாரத்னவை கைது செய்து தடுத்து வைக்குமாறு சட்டமா அதிபர் தனது மீள்பரிசீலனை மனுவின் மூலம் கோரியுள்ளார்.