பலா பழம் எல்லோருக்கும் பிடிக்கும். அதன் சுவைக்கு அடிமையானவர்கள் நிறைய பேர். ஆனால் ஆசை தீர எல்லோராலும் அதனை சாப்பிட முடிவதில்லை. காரணம், சர்க்கரை நோயாளிகள் அதை சாப்பிட்டால், நோய் அதிகரித்துவிடும்.
அதை நினைத்து பலா பழத்தை ஒதுக்குகிறவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி, பலா காயில் அவர்கள் பலவிதமான உணவுகளை தயாரித்து ருசிக்கலாம். ‘பலா காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறைய வாய்ப்பிருக்கிறது. குண்டான உடல் எடை குறையவும் செய்யும்’ என்று சொல்கிறார்கள். அதனால் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்கள் பலா காய்களை நாடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
கேரளாவை சேர்ந்த ஜேம்ஸ் ஜோசப் என்பவர் பலா காய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
“சர்க்கரை நோயாளிகள் பலா பழத்தை சாப்பிடவேகூடாது என்று காலங்காலமாக கூறப்பட்டு வருகிறது. பலாவில் பல இனங்கள் உள்ளன. ஆனால் அவைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஆங்கிலத்தில் ‘ஜாக் ப்ரூட்’ என்று சொல்லிவிட்டதால், பலா பழம் மட்டுமின்றி அதை சார்ந்த அனைத்தையுமே சர்க்கரை நோயாளிகள் ஒதுக்கிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பலா காயில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி இருக்கிறது.
பலா காயில் இருக்கும் மருத்துவ குணத்தை பற்றி எனக்கு பாதிரியார் தாமஸ் என்பவர் வெளிப்படுத்தினார். அவர் ஒருநாள் பலா காயில் தயாரித்த உணவை காலையில் சாப்பிட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் அவரது உடலில் சர்க்கரையின் அளவு ரொம்பவும் குறைந்திருக்கிறது. அதை என்னிடம் சொன்னார். அதன் பின்பு நான் சிட்னிக்கு சென்று பலாவை பற்றிய ஆய்வு தகவல்களை சேகரித்தேன். அப்போதுதான் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் பலா காய்க்கு இருப்பதை தெரிந்துகொண்டேன்” என்கிறார்.
பலா காயில் இருக்கும் அபூர்வ சக்தியை தெரிந்துகொண்ட பாதிரியார் தாமஸ், தினமும் பலா காயில் தயார் செய்த பல்வேறு உணவுகளை சாப்பிடத் தொடங்கியிருக்கிறார். அப்போது அவருக்கு மூன்று மாதங்களில் 7 கிலோ எடை குறைந்திருக்கிறது.
“பலா காயில் இருந்து விதையை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை வேகவைத்து மீன் குழம்பு அல்லது மாமிச குழம்பு சேர்த்து சாப்பிட்டால் வயிறு சீக்கிரமே நிறையும். உடலுக்கும் நல்லது.
பலா காயில் பெருமளவு கரையாத நார்ச்சத்து இருக்கிறது. அதனால் ஜீரண நேரத்தில் அதில் இருக்கும் சர்க்கரையை உடல் உறிஞ்சி எடுக்கும் முன்பே வயிற்றில் இருந்து உணவு வெளியேறிவிடும்.
தற்போது நிறைய பேர் பலா காய் உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் கேரளாவில் உள்ள தோட்டங்களில் இப்போது பலா காய்கள் வீணாகுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.
“சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரையில் அவர்கள் ‘உணவுக் கட்டுப்பாடு- உடற்பயிற்சி- மருந்து’ மூன்றையும் முறையாக பின்பற்றவேண்டும். அரிசி, கோதுமை உணவு சாப்பிடுவதைவிட குறைந்த அளவு சர்க்கரையே பலா காய் உணவுகளை சாப்பிடும்போது உடலில் சேருகிறது. கரையக் கூடிய நார்ச்சத்து அதில் அதிகம் இருப்பதே அதற்கான காரணமாகும்.
பலா காயில் புரோட்டின் சத்து குறைவாகவே இருக்கிறது. அதை நிவர்த்தி செய்துகொள்ள மீன் அல்லது இறைச்சியை அதோடு சேர்த்து சாப்பிடவேண்டும். இது உடல் எடையை குறைக்க வழி செய்வதால், அதிக உடற்பயிற்சி தேவையில்லை. காலப்போக்கில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் அளவையும் குறைக்க வாய்ப்பிருக்கிறது. பலா காயை வெட்டி சுடு நீரில் போட்டால் 15 நிமிடங்கள் ஆனதும் அதில் இருந்து சுளைகளை எளிதாக பெயர்த்து எடுத்து உணவு தயாரிக்கலாம்”.