Azhagu Serial : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில், அழகம்மையாக நடிப்பவர் நடிகை ரேவதி. ஆனால் கிட்டத்தட்ட 3 வாரத்துக்கும் மேலாக அவரைக் காணவில்லை.
திருநா – அர்ச்சனா திருமணம் முடிந்ததோடு ரேவதி எங்கு போனார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள். அதன் பிறகு பிரியாவைக் கொல்ல பூர்ணா செய்த திட்டத்தில் அவரது அம்மா மாட்டிக் கொண்டார். தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். இதைக் கண்டறிந்த போலீஸார், பூர்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதைத் தொடர்ந்து, பூர்ணாவின் அம்மா சகுந்தலா அவளை ஜாமீனில் எடுத்தார்.
வீட்டுக்கு வந்த பூர்ணாவிடம் கோபத்தைக் காட்டினான் மதன். நம்மை எதிர்த்துப் பேசுகிறானே என்ற கோபத்தில் மதனை அடிக்க கை ஓங்கினாள் பூர்ணா. ஆனால் அவள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், அவள் கைகளை தடுத்து தனது கணவனுக்காக பூர்ணாவிடம் சண்டையிட்டாள் காவ்யா. ‘அவன் என் தம்பி, எனக்கு அவன திட்டவும் அடிக்கவும் எல்லா உரிமையும் இருக்கு’ என பூர்ணா சொல்லியும், அதெல்லாம் காவ்யாவிடம் எடுபடவில்லை.
அம்மா வீட்டில் இருந்தாலும் அந்நியர் போல யாருமே பூர்ணாவை கண்டுக் கொள்ளாதது அவளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. போதாக்குறைக்கு அவளது மனசாட்சி வேற திரியை கொளுத்திப் போட்டது. இதற்கிடையே இரவு 12 மணிக்கு காவ்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். சொல்லவா வேண்டும் பூர்ணாவுக்கு, அவளுக்குள் இருக்கும் வெறித்தனம் கோபத்தின் உச்சத்திற்கே சென்றது. காவ்யாவின் பிறந்தநாளுக்கு சுதா, ரவி, மகேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டுக்கு வந்ததும், அவர்களிடம் வம்பிழுக்க சென்ற பூர்ணா வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
அனைவரும் மொட்டை மாடியில் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்க, கீழே பூர்ணாவுக்கு நிலைக் கொள்ளவில்லை. ஸ்விட்ச் போர்டில் ஷாக் அடிக்க செட் செய்து விட்டு, கேஸ் சிலிண்டரை திறந்து விட்டாள். அந்த நேரம் கீழே வந்த காவ்யா கேஸ் வாசனை வருகிறதே என கிச்சனுக்கு சென்று, லைட்டைப் போடவும், பூர்ணா தீக்குச்சியை உரசி போடவும் சரியாக இருந்தது. சத்தம் கேட்டு மேலே இருந்தவர்கள் வந்துப் பார்க்க, ஷாக் அடித்து காவ்யா விழுந்து கிடந்தாள்.
பிறந்தநாளில் இப்படியானதும் காவ்யாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் ரவி குடும்பத்தினர். மறுநாள் மதன் அவளை கூப்பிட செல்கையில், இது நிச்சயம் பூர்ணாவின் திட்டமாகத் தான் இருக்குமென ரவியும், மகேஷும் சொல்ல, அவனுக்கும் இது உண்மை என்றே விளங்கியது. ஆவேசமாக வீட்டுக்கு வந்தவன், ’இனி இவ இங்க இருக்கக் கூடாது’ என கோபமாக கூறிவிட்டு சென்றான். எல்லா பெண்களும் வன்மம் நிறைந்தவர்கள், கொடுமையானவர்கள் என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்த வகை பெண்களுக்கு பூர்ணா கதாபாத்திரம் நிறைய டிப்ஸ் தந்துக் கொண்டிருக்கிறது.