திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவியின் வாட்ஸ் ஆப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளது.
இதனைக்கண்ட அந்தபெண் தெரியாத எண் என்பதால் கண்டுக்கொள்ளவில்லை. பின்பு காதல் குறித்து நிறைய குறுஞ்செய்திகள் வந்துள்ளது.
இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தபெண், அந்த எண்ணை தொடர்பு கொண்டு எனக்கு கொஞ்ச நாளில் திருமணம் நடைபெற போகிறது. இது போன்ற செய்திகளை அனுப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
சிறிது நாட்கள் குறுஞ்செய்தி வருவது நின்ற நிலையில், ஆபாச படங்கள் அவரது எண்ணிற்கு வர தொடங்கியுள்ளன.
இப்படியே விட்டால் விபரீதத்தில் முடியும் என்பதை உணர்ந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, புகாரை தொடர்ந்து அந்த எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த எண் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரது என கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து வினோத் குறித்த தகவல்களை சேகரித்த போலீசார், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மும்மூர்த்தி நகரில் அவன் இருப்பதை கண்டறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, வினோத்திடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதில், True Caller’யில் குத்துமதிப்பாக 10 எண்களை பதிவிடுவது வினோத்தின் வழக்கம். அப்படி பதிவிடும்போது ஏதேனும் பெண்கள் பெயர் வந்தால் உடனடியாக அந்த எண்ணை தனது மொபைலில் சேமித்து வைத்து கொண்டு, அவர்களிடம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி பேசும் பெண்களை காதல் வலையில் விழவைப்பது தான் வினோத்தின் முழுநேர வேலையாக இருந்துள்ளது.
மேலும், மிகவும் நெருக்கமாகும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை அனுப்புவது என பல சில்மிஷயத்தை செய்துள்ளார். அதில் மயங்கும் பெண்களை நேரில் வரவைத்து தனது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
வினோத் மூலம் மார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
முன்பின் தெரியாத நபரிடம் குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ வந்தால் தயங்காமல் அந்த எண்ணை பெண்கள் ப்ளாக் செய்ய வேண்டுமென போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.