போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாக தெரிவித்து, வீடுகளில் சோதனை மேற்கொள்வதை போல நடித்து கொள்ளையடித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவரை இன்று பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.
இவர்கள் பெருமளவு பணம், நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அதன்படி, அதுருகிரிய பொலிஸ் பிரிவில் 06 வீடுகளும், பதுக பொலிஸ் பிரிவில் 04 வீடுகளும், நவகமுவ கஹதுடுவ, கம்பஹா, வீரகுல, கணேமுல்ல, மொராகாஹேன, பிலியந்தல, எம்பிலிப்பிட்டிய, கோடகவெல பகுதிகளிலுள்ள 23 வீடுகளில் இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது. கொள்ளை குறித்த முறைப்பாடுகளையடுத்து, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கும்பல் சிக்கியது.
முக்கிய சந்தேக நபர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கடமையில் இருந்தபோது திருட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபர்கள் இருவருமே நீண்ட காலமாக சூதாட்ட விடுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியான பிரதான சந்தேகநபர் தனது உத்தியோகபூர்வ பொலிஸ் அடையாள அட்டையைப் போன்ற ஒரு போலி பொலிஸ் அடையாள அட்டையை தயாரித்து கொள்ளையிலீடுபட்டுள்ளார்.
வீடுகளிற்கு சென்று, போதைப்பொருள் வைத்திருப்பதாக முறைப்பாடுள்ளதாக தெரிவித்து, அடையாள அட்டையை காண்பித்து, வீடுகளிலுள்ள அலமாரிகளில் தேடுதல் நடத்தி தங்கம் மற்றும் நகைகளைத் திருடினார்.
சந்தேகநபர்கள் 30 வயதான பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆவார். இவர் ஹான்புன்ன, ஹகுருவெலவின் ஜல்கஹேன பகுதியில் வசிப்பவர் கைதான மற்றவர் வீரகெட்டியவின் வெகண்டேவேலவில் வசிக்கும் 34 வயதுடையவர்.
திருடப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி, ஒரு ரப்லெட் கணினி, ஒரு பணப்பை, வங்கி அட்டைகள் மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டையையும் பொலிசார் மீட்டனர்.
அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகநபருக்கு பொலிசார் வரைவிரித்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.