தமிழக ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மற்றும் தமிழக புதுச்சேரி நீதித்துறை குழுவினருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன் தனித்தனியாக முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
எழும்பூரில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு பங்கேற்கவுள்ளது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகளான, ஹரிபரந்தாபன், ஏ.கே.ராஜன், சண்முகம், விமலா, அக்பர் அலி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இச்சந்திப்பினையடுத்து நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழக மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீதித்துறையினர் பங்கேற்கின்றனர்.
தமிழக, புதுச்சேரி வழக்குரைஞர் பேராயத்தின் தலைவர் அமல்ராஜ், துணைத்தலைவர், கார்த்திகேயன், தந்தைபெரியார் திராவிட கழகத்தின் சிரேஸ்ட சாமிதுரை, தமிழக முற்போக்கு பெண் வழக்குரைஞர் சங்கத்தின் துணைத்தலைவர் தமயந்தி, மக்கள் குடியரசுக்கட்சியின் தலைவர் ரஜினிகாந், விடுதலைச் சிறுத்தைகள் கழகத்தின் மாநில செயலாளர் த.பார்வேந்தன்,
ஜனநாயக வழக்குரைஞர் சங்கத்தின் மாநில செயலாளர் பாரதி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய்யத்தின் மாநில அமைப்பாளர் ஜிம்ராஜ் மில்டன், நாம் தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் சுரேஸ், முக்குலத்தோர் புலிப்படையின் மாநிலச் செயலாளர் கோகுலகிருஸ்ணன், பெரியார் திராவிடக் கழகத்தின் மாநில செயலாளர் அருண் ஆகியோர் உட்பட சட்டத்தரணிகள் பங்கேற்கவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில் சட்டரீதியான அனுகுமுறைகள் ஊடாக இந்திய மத்திய அரசு மற்றும் சர்வதேச தரப்புக்களை கையாள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
இதேவேளை, சென்னையில் நடைபெறும் 6ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்வில் முக்கிய அதிதியாக பங்கேற்கவேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு சென்றுள்ள சி.வி.விக்கினேஸ்வரன் தொடராக இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.