ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டுகள் புதைந்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியின் டார்ட்மண்ட் நகரிலே குண்டுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது கூட்டுப் படைகளால் டார்ட்மண்டில் குண்டுகள் வீசப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நகர அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், டார்ட்மண்ட் நகரத்தில் குண்டுகள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கும் நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.
கட்டுமானத் திட்டங்களின் போது கண்டறியப்பட்ட ‘முரண்பாடுகள்’ அடிப்படையில் சந்தேகங்கள் எழுந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழி தோண்டி பார்த்த பின்னரே வெடிகுண்டுகள் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
ஒவ்வொரு இடத்திலும் 500 மீ சுற்றளவில் வசிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கோரப்பட்டனர், அகழ்வாராய்ச்சி பணிகள் பிற்பகலில் தொடங்கப்படும்.
சனிக்கிழமை முதல் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இரண்டு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் 58 நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டு முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களும் பாதுகாப்பிற்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி கண்டெயினர் மூலம் பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
டார்ட்மண்டின் நகர மையத்தின் பெரும்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் பிரதான ரயில் நிலையம் மற்றும் அருகிலுள்ள தேசிய கால்பந்து அருங்காட்சியகம் ஆகியவை அடங்கும்.ரயில் நிலையம் ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்படும்.
இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது ஜேர்மனியில் ஒரு பொதுவான நிகழ்வு, ஆனால் ருர் பிராந்தியத்தில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய வெளியேற்றமாக இது இருக்கலாம் என்று உள்ளுர் ஊடகங்கள் கூறுகின்றன.
ஜேர்மனியில் 2017 ஆம் ஆண்டில், சுமார் 65,000 பேர் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். கடந்த செப்டம்பரில், ஹனோவரில் 550 எல்.பி எடையுள்ள குண்டு செயலிழந்த நிலையில் 15,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.