மந்திகை வைத்தியசாலையின் நிர்வாக குறைபாடுகள் காரணமாக நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இன்று காலை மந்திகை ஆதார வைத்தியசாலை பகுதியில் மின்தடை ஏற்பட்டநிலையில், மின் பிறப்பாக்கி உதவியுடன் வைத்தியசாலையின் செயல்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் பிறப்பாக்கி 2 மணித்தியாலங்களுக்கு மேல் இயங்கவில்லை என்றும் இதனால் மந்திகை ஆதார வைத்தியசாலையின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிப்போயிருந்தன.
சத்திரசிகிச்சைகள் அனைத்தும் அரைகுறையாக முடங்கிய நிலையில், சத்திரசிகிச்சைக்காக மயக்கமருந்து ஏற்றப்பட்டவர்கள், ஸ்கேன் போன்றவற்றுக்காக தயார் நிலையில் இருந்தவர்கள் நோயாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்படவேண்டியிருந்ததாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சத்திரசிகிச்சைக்கு பொறுப்பாக இருந்த வைத்தியர் மின்பிறப்பாக்கிக்கு பொறுப்பானவர்களை அவசரமாக தொடர்பு கொண்டபொழுதும் அவர்கள் அசண்டையீனமாக இருந்ததாகவும், இது போன்ற பிரச்சினைகளுக்கு தயார் நிலையில் இல்லாதிருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கவலை வெளியிட்டார்கள்.
மந்திகை வைத்தியசாலையின் நிர்வாக குறைபாடுகள் தொடர்பாக நோயாளர்கள், பிரதேச மக்கள் முறையிட்ட போதும் நிர்வாகம் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காது அசண்டையீனமாக இருப்பதாக பலரும் வருத்தம் தெரிவித்தார்கள்.