ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டில் நிலவுக்குச் செல்வதாகக் கூறும் ஜப்பானிய கோடீஸ்வரர் வழித் துணைக்கு ஒரு காதலி தேவை என ஒன்லைனில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
ஜப்பானின் பிரபல கோடீஸ்வரரான யூசாகு மெய்சாவாவே இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
ஒரு ஜப்பானிய நடிகையுடன் சிலகாலம் வாழ்ந்து வந்த இவர் சமீபத்தில் பிரிந்து செல்வதாக அறிவித்தார். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ள யூசாகு 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறு ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தார்.
முன்னர் ஒன்லைன் பஷன் நிறுவனமான சோஸோவின் தலைவரான மெய்சாவா, அதை கடந்த ஆண்டு ஜப்பானின் யாஹுவுக்கு விற்றுவிட்டார். இந்நிறுவனம் விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை வாங்குவதில் பெயர் பெற்றது.
அவர் 2023 ஆம் ஆண்டில் அல்லது அதற்குப் பிறகு தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ரொக்கெட் மூலம் முதல் தனியார் பயணியாக சந்திரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார்.
இந்தப் பயணத்தில் சுமார் அரை டஜன் கலைஞர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவும் மேசாவா திட்டமிட்டுள்ளார், அவரது ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட், நிலவில் இறங்காமல் அதைச் சுற்றி வட்டமிட்டு பின் திரும்பும் என்று கூறப்படுகிறது.
ஒரு வெப்தொடராக ஒளிபரப்பாகும் மட்ச் மேக்கிங் பயிற்சி சேவைக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும் இது மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூசாகு மெய்சாவா தனது ட்விட்டர் கணக்கில் இதுபற்றி கூறியதாவது:
”நான் இப்போது வரை விரும்பியபடிதான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு இப்போது வயது 44. தற்போது தனியாக வாழும் எனக்கு தனிமை மற்றும் வெறுமையின் உணர்வுகள் மெதுவாக என் மீது படரத் தொடங்குகின்றன. நான் நினைக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். அதாவது நான் நேசிக்க ஒரு பெண் தேவை.
நான் எனது ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டில் செல்லும்போது என்னுடன் நிலவுக்கு உடன் வர ஒரு காதலி தேவை. 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். சந்திரனுக்கு பயணம் செய்யும் ‘முதல் பெண்’ணாக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது?” விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17, 2020. நிலவுக்கு என்னோடு வரவிரும்புவர்களிடமிருந்துவரும் விண்ணப்பதாரர்களில் ஒன்றை மார்ச் இறுதிக்குள் இறுதித் தேர்வு செய்வேன்.”
இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.