நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனாதிபதிக்கு எவ்வாறான அதிகாரங்கள் இருந்தாலும் அவரால் முழுமையான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது.
ஜனாதிபதிக்கு வேண்டியளவு அதிகாரங்கள் காணப்படுகின்றன. எனவே அவர் நினைத்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சிலர் எண்ணுகின்றனர்.
அது தவறாகும். அவ்வாறு எண்ணுபவர்களின் தெளிவின்மையே அவ்வாறு சிந்திக்க வைக்கிறது.
நாம் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்காகவும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம்.
அதற்கமைய ஒழுக்கமுடைய நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.