கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மாதிவெல பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
நீதிபதிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
குறித்த குற்றச்சாட்டின் கீழ் பிடியாணை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு முன்னர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதற்கமைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால், நீதிபதிகளான பத்மினி ரணவக்க குணதிலக்க கிஹான் பிலப்பிட்டிய மற்றும் தம்மிக்க ஹேமாபால ஆகியோர் நீதிமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தியபோது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு அல்லது அதற்கு முயற்சித்து குற்றமிழைப்பது தொடர்பில் சந்தேகநபராக பெயரிடுவதற்கு போதுமான சாட்சியம் உள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 111 ஆம் பிரிவின் ஊ சரத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதிகளின் கடமைகளுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளமை தொடர்பில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சரத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.