தமிழகத்தில் வேலைக்கு வந்த பெண்களின் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று அங்கிருக்கும் சாய்பாபா காலனியில் உள்ளது.
இந்த பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு என்று தனி யூனிபார்ம் ஒன்று உள்ளது, இதனால் அவர்கள் வந்தவுடன் உடனடியாக ஆடை மாற்றும் அறைக்கு சென்று, ஆடையை மாற்றுவர்.
அப்படி அவர்கள் ஆடை மாற்றும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதில் 5 பெண்கள் ஆடை மாற்றுவது போன்று இருந்தது.
இதனால் அந்த வீடியோவில் இருந்த பெண் ஒருவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, உடனடியாக பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பங்கில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் சுபாஷ்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், அந்த வீடியோக்களை, நீக்கிவிடுவதாக சொல்லிவிட்டு தன் செல்போனுக்கு மணிகண்டன் என்ற மற்றொரு ஊழியர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் இதனை தன் நண்பரான செய்தியாளர் மருதாச்சலம் என்பவருக்கு அனுப்பி வைக்க, அதை அவர் சமூகவலைத்தளங்களில் பெண்களின் முகங்களை மறைக்காமல் அப்படியே பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.பொலிசார், விசாரணைகளுக்கு பிறகு சுபாஷ், மணிகண்டன், செய்தியாளர் மருதாச்சலம் ஆகிய 3 பேரையும் கடந்த 8-ஆம் திகதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்பம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
தற்போது, சுபாஷ், மருதாச்சலம், மணிகண்டன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலும் ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் வழங்கப்பட்டது