தமிழகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவன் கேரளாவில் இருந்த போது வசமாக சிக்கியுள்ளார்.
ராஜபாளையம் சங்கர பாண்டியாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் கடந்த 7-ந் திகதி அழுகிய நிலையில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பிணமாகக் கிடந்த பெண்ணின் கழுத்தில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது தெரியவந்தது.
அந்தப் பெண் கழுத்தில் தாலி கிடந்ததால் திருமணமானவர் என கருதிய பொலிசார் அவர் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாகக் கிடந்தவர் சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (29) என தெரியவந்தது.
இவரைக் கணவர் குணசேகரன் (35) கொலை செய்திருப்பார் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கேரள மாநிலம் மூணாறு எஸ்டேட்டில் வேலை பார்த்த குணசேகரன் அங்கு ஒரு பெண்ணுடன் பழகி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பழனியம்மாளுக்கு தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவத்தன்று ஊருக்கு வந்த குணசேகரன் மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவி பழனியம்மாளுடன் தகராறு செய்துள்ளார். அதன்பிறகு இருவரும் மாயமான நிலையில், பழனியம்மாள் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். எனவே அவரை குணசேகரன்தான் கொலை செய்திருக்கக் கூடும் என பொலிசார் கருதினர். அவரைத் தேடி தனிப் படையினர் மூணாறு சென்றனர். ஆனால், அங்கு குணசேகரன் இல்லை.
இதனால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொல்லத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் அவர் வேலை பார்ப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர், குணசேகரனைக் கைது செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மனைவி பழனியம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்ததையும் உடலை சுடுகாட்டு முட்புதரில் வீசியதையும் குணசேகரன் ஒத்து கொண்டுள்ளார்.